கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடிச்சாம் என்ற பழமொழியை நினைவூட்டும் விதமாக, ஏற்கனவே டபுள் மீனிங் வசனங்களுக்காக வலைதளங்களில் வறுத்தெடுக்கப்பட்டுவரும் ஓவியாவின் ‘90 எம்.எல்’ படம் அதிகாலை 5 மணி சிறப்புக் காட்சியாகவும் ரிலீஸாக இருப்பதாக அதிர்ச்சியான தகவல்கள் வருகின்றன.

இதற்கு முன் அஜீத்,விஜய், ரஜினி போன்ற பெரும் நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே அதிகாலைக் காட்சிகளாக வெளியிடப்பட்டு வந்த நிலையில் ஓவியாவே வெளியிட்டிருக்கும் அதிகாலை சிறப்புக் காட்சி செய்தி கோடம்பாக்கத்தை கொஞ்சம் உலுக்கவே செய்திருக்கிறது.

பச்சை பச்சையான வசனங்கள், உதட்டோடு உதடு கவ்வும் முத்தக் காட்சிகள் போன்றவற்றால் பெரும் பரபரப்புக்கு ஆளாகியிருக்கும் ஓவியாவின் ‘90 எம்.எல்’ ட்ரெயிலர் இதுவரை 63 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பதம் பார்த்ததன் எதிரொலியாக படத்துக்கு ஒரு பிட்டு ஸார் ஒரு ஹிட்டுப் படத்துக்கு இணையான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமலே தியேட்டர்களும் குவிந்து வருகின்றன.

இந்த மிதப்பில், தற்போது படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 90 எம்.எல் திரைப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாக உள்ளது. அன்று தான் ரசிகர்களுடன் சேர்ந்து அதிகாலை சிறப்பு காட்சியைப் பார்க்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படத்துக்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். யோகி பாபு, சிம்பு, பிரபுதேவா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வலம் வருகின்றனர். 

‘பேட்ட’,’விஸ்வாசம்’ படங்களுக்குக் கொஞ்சமும் குறையாத எதிர்பார்ப்பு இந்த ‘90 எம்.எல்’ படத்துக்கும் ஏற்பட்டிருப்பதாக தன் பெயரை வெளியே சொல்ல வெட்கப்படும் தியேட்டர் உரிமையாளர் ஒருவர் தெரிவிக்கிறார். அட சபலிஸ்டுகளா...