பெரும் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் நேற்று வெள்ளியன்று ரிலீஸான ஆறு படங்களில் சிவகார்த்திகேயனின் ‘கனா’வும், ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ ஆகிய இரு படங்கள் மட்டுமே வசூல் ரீதியாகவும், ரிப்போர்ட் ரீதியாகவும் தேறியுள்ளன.

இந்த ரேசில் எடுத்த எடுப்பில் பலத்த அதிர்ச்சியோடு படுதோல்வியை சந்தித்த படம் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’. அவரது 25 வது படம் என்று விளம்பரம் செய்யப்பட்ட படத்தில் விஜய்சேதுபதி 25 நிமிடங்கள் வராதது ஒருபுறமிருக்க, அவரது போர்ஷன்கள் படு திராபையாக இருந்தன. அடுத்த அடி வாங்கியவர் திருவாளர் தனுஷ். நல்ல படங்கள் செய்துகொண்டிருக்கும் போதே நடுவில் அவ்வப்போது ‘மாரி2’ போன்ற குப்பைகள் வழங்குவது தனுஷின் வழக்கம்.

ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ பழிவாங்கும் மசாலா என்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களைக் கட்டிப்போடும் திரைக்கதையால் ஓரளவு தப்பிப் பிழைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் சவலைப் பிள்ளை போல் இறங்கியிருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ சின்ன பட்ஜெட் படம் என்கிற வகையில் பெரிய ஆபத்தில் இல்லை. ஆனால் ‘ராட்சசன்’ படத்தில் வாங்கிய பெயரிலும் சம்பாதித்த பணத்திலும்  பாதியைப் பறிகொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

நடிகர் விஷாலின் நிறுவனம் வாங்கி வெளியிருக்கும் கன்னட டப்பிங் படமான ‘கே.ஜி.எஃப்’க்கு தரப்பட்ட பில்ட் அப் படத்தில் இல்லை. இத்தனை நேரடி ரிலீஸ்களோடு மோதும் தகுதிகள் இல்லாத படம் என்பதால் அதுவும் தேறுவது கஷ்டம். ஆக இந்த ரேசில் தரத்திலும் வசூலில் தனித்த கொடி நாட்டியிருப்பதென்னவோ சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’தான்.