தங்களின் வகுப்புத்தோழன் சினிமாவில் நல்லபடியாக வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். இவர்கள் தயாரிக்கும் படத்தின் பெயர் 'நெடுநெல்வாடை'.

 இதில் 'பூ ' ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் , அஜய் நட்ராஜ், மைம் கோபி ஐந்து கோவிலான், செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செல்வ கண்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் கதை பற்றி அவர் கூறிய போது சமூகத்தில், மகன் வழி பேரன்-பேத்திகளுக்கு கிடைக்கும் சொத்துரிமை அங்கீகாரம் மகள் வழி பேரன் பேத்திகளுக்கு கிடைப்பதில்லை.

குறிப்பாக ஈமக்கடன்களைச் செய்ய கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.  இதை நெடுநெல்வாடை படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளிகள் போல் துரோகம் இழைத்தவர்கள் போல் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கம் இருக்கும் எதார்த்தத்தையும் நியாயத்தையும் படம் பேசுகிறது.  இவை இரண்டும் சரிசமமாக கலந்து ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் என பார்ப்பவர்களே கூறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.