டெல்லியைச் சேர்ந்த பாடகி ஷிவானி பாத்தியா, ஆக்ராவில் நடக்கவிருந்த, கச்சேரி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரியாலிட்டி ஷோ மூலம் பாடகியாக அறியப்பட்டவர் டெல்லியைச் சேர்ந்த ஷிவானி பாத்தியா.  24 வயதாகும் இவர் கடந்த 28ஆம் தேதி கணவர் நிக்கில் பாத்தியாவுடன், ஆக்ராவில் நடைபெறவிருந்த கச்சேரி ஒன்றுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர்.

யமுனா எக்ஸ்பிரஸ்வே வழியாக இவர்கள் சென்றுக்கொண்டிருந்த போது, நிக்கில் பாத்தியா... முன்னாள் சென்ற காரை ஓவர்டேக் செய்ய முயன்று, காரின் வேகத்தை அதிகரித்துள்ளார், அப்போது கார் நிலை தடுமாறி கண்ணிமைக்கும் நேரத்தில், தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியது.  இதில் ஷிவானி மற்றும் அவருடைய கணவர் நிக்கில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அங்கு விரைந்து வந்த போலீசார் உடனடியாக இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் நேற்று பாடகி ஷிவானி பரிதாபமாக மரணமடைந்தார்.  இந்த சம்பவம் இவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

4 வயதில் மேடையில் அரங்கேற்றம் செய்ய தொடங்கிய, ஷிவானி கடந்த 2012ஆம் ஆண்டு போஜ்புரி ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு இரண்டாவது பரிசை பெற்றார். பின் இவருக்கு திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் கிடைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது