அஜீத், விஜய் ரசிகர்களைச் சீண்டிப்பார்க்கும் வகையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு ‘என்.ஜி.கே’ படத்துக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக 215 அடி உயரத்தில் கட் அவுட் வைத்துள்ளனர். இந்த கட் அவுட் சிங்கிள் ரசிகர் ஒருவரின் சொந்தச் செலவில் உருவாகியுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுதான். அது போலவே கட்அவுட் வைப்பதில் ரசிகர்கள் மத்தியில் போட்டி நடக்கும். சில நேரம் அடிதடி வரை அது நீடிக்கும். நடிகர் விஜய்க்கு கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சார்பில் ’சர்கார்’ பட வெளியீட்டின்போது 175 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து சாதனை புரிந்தனர்.

அந்தச் சாதனையை முறியடிக்கும் வகையில் நடிகர் அஜித்குமாருக்கு திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ரசிகர்கள்,’விஸ்வாசம்’ திரைப்படம் வெளியிடப்பட்ட போது ரூ. 1.50 லட்சம் செலவில் 180 அடி உயரத்தில் கட் அவுட் வைத்தனர். இதுவரை இதுவே சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்து நாளை  வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள ’என்ஜிகே’படம் திரைக்கு வர உள்ள சூழலில் திருவள்ளூர் மாவட்ட நடிகர் சூர்யா ரசிகர் மன்றத் தலைவராக உள்ள திருத்தணியைச் சேர்ந்த எல்.டி.ராஜ்குமார் என்பவர், நடிகர் சூர்யாவுக்கு 215 அடி உயரத்தில் கட் அவுட் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். ரூ 7லட்சம் பொருட்செலவில் 40 தொழிலாளர்கள் கேரளா மற்றும் ஆற்காடு பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டனர். கட்அவுட் வண்ணம் தீட்ட 25 நாட்கள், சாரம் அமைக்க 5 நாட்கள், கட் அவுட் அமைக்க 5 நாட்கள் என 35 நாட்கள் கடுமையாக உழைத்து 215 அடி உயரம் கொண்ட சூர்யா கட் அவுட் வைத்துள்ளார். திருத்தணி-சென்னை பைபாஸ் சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மிகப் பெரிய கட் அவுட்டைப் பார்வையிட வரும்படி சூர்யா, செல்வராகவன் உட்பட்ட படக்குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராஜ்குமார்.