மாற்றுத்திறனாளிகளின் மனதை வென்ற பொன்னியின் செல்வன்... படம் பார்த்து சிலாகித்துபோன மாணவ, மாணவிகள்
திருநெல்வேலியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்காக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது.
சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி திருநெல்வேலியில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள பி.எஸ்.எஸ். என்கிற தனியார் திரையரங்கில் இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிா்வாகத்தினர் சாா்பில் செய்யப்பட்டிருந்தது.
இதில், திருநெல்வேலி மாவட்டத்தில் சமீபத்தில் உதவி ஆட்சியராக (பயிற்சி) பொறுப்பேற்றுக்கொண்ட கோகுலும் கலந்துகொண்டாா். இவரும் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். அவர் 200 மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை கண்டு ரசித்தார். இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் தியேட்டரில் படம் பார்த்தது இதுவே முதன்முறையாம்.
இதையும் படியுங்கள்... ஆண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கி... மதுரையில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்
பாா்வையற்றோரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கேட்டு புரிந்து கொள்வதற்கு வசதியாக அதிநவீன ஆடியோ சிஸ்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் இப்படத்தை புரிந்துகொள்ள ஏதுவாக பிரத்யேகமாக அவர்களுக்காக சப் டைட்டிலும் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
படம் பார்க்க வந்த மாணவ, மாணவிகளிடம் பேசிய உதவி ஆட்சியா் (பயிற்சி) கோகுல், ‘அனைவரும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்’ என அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார். இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா் என நியூ இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்... அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன் - கலக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ்