உலகம் முழுவதும் 2.0 திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 3வது திரைப்படம், இந்தி நடிகர் அக்சய் குமார் வில்லனாக நடித்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. இதனால் 2.0 படத்தின் விநியோக உரிமை வெளிமாநிலங்களிலும், வெளி நாடுகளில் ஹாட் கேக்காக விற்றுப்போய்விட்டது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் 2.0 படத்தின் வியாபாரம் தற்போது வரை சூடுபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகம் தான் ரஜினியின் மிகப்பெரிய மார்கெட் என்பதால் இங்கு படத்திற்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா எக்கு தப்பான விலையை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமாக ரஜினி படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் வட விநியோக உரிமையை வாங்க தயங்கி வருவதாக கூறப்படுகிறது. படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட லைக்கா கூறும் விலை தங்கள் பட்ஜெட்டுக்கு ஒத்துவராது என்று பல விநியோகஸ்தர்கள் ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

விநியோகஸ்தர்கள் தற்போது வரை உறுதியாகாத காரணத்தினால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கூட 2.0 எந்தெந்த நகரங்களில் வெளியாகும் என்கிற தகவல் தெரியவில்லை. இதனால் படத்திற்கான முன்பதிவு தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரம் இந்த நாளில் 2.0 வெளியாக உள்ள நிலையில் இன்னும் ஒன்று இரண்டு நாட்களில் ரிசர்வேசன் துவங்கி ஆக வேண்டும்.

ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று சென்னையின் பிரபல திரையரங்கான ரோஹினி சில்வர் ஸ்க்ரீன் உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் கேரளாவில் வரும் 29ந் தேதி மட்டும் 2.0 ஏழு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இது அண்மையில் வெளியான சர்காரை விட அதிக காட்சிகள் ஆகும்.

கேரளாவில் கூட காட்சிகள் இறுதியாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் இறுதியாகாதது திரையரங்க உரிமையாளர்களை மட்டும் இல்லாமல் ரஜினி ரசிகர்களையும் ஆதங்கத்தில் ஆழ்த்தியுள்ளது.