பாகுபலி - 2 என்ற டப்பிங் பட வசூலுடன் ’2.0’ போட்டி போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய முதல் நாள் அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் விற்பனை ஆகிவிட்டதாக ஊடகங்கள் உரக்கக்கூவி வருகின்றன.

அஜித், விஜய் படங்களை முதல் நாள் பார்க்கும் பரபரப்பு, வேகம் 2.0 பட டிக்கட் விற்பனையில் இல்லை என்பதுடன் மந்தமான நிலையே உள்ளது. முதல் நாள் அதிகாலைசிறப்பு காட்சி, மற்றும் பிற காட்சிக்கான 80% டிக்கெட்டுகளை தியேட்டர் நிர்வாகம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் முதல் நாளுக்கான டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் வெளி மார்க்கெட்டில் இரு மடங்கு விலைக்கு 2.0 டிக்கெட்டை தியேட்டர் நிர்வாகமும், விநியோகஸ்தர்களும் விற்க தொடங்கி விட்டனர். 

இது சென்னை நகர நிலவரம்.

 2.0 படத்தின் வசூல் தமிழகத்தில் எப்படி இருக்கும் என தியேட்டர் வட்டாரத்தில் விசாரித்த போது, “ஒப்பனிங் இருக்கும் அது சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டும் இருக்கும். பிற இடங்களில் ஆரவாரமான வரவேற்பும், வசூலும் இருக்கும் என கூற முடியாது” என்கின்றனர்.

அஜித், விஜய் இவர்களுக்கு இருப்பது போன்று இளைஞர் கூட்டம் ரஜினிக்கு ரசிகர்களாக இல்லை. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 2 .0 படம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால் முதல் நாள் 3000 முதல் 3500 காட்சிகள் நடைபெறலாம். இவற்றுக்கான டிக்கெட்டுகள் குறைந்த பட்சம் 250 முதல் 2000 வரை விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது.

லைகா நிறுவனத்தை பொறுத்தவரை தமிழ்நாடு தியேட்டர் வசூல் மூலம் சுமார் 60 கோடி வருமானம் கிடைத்தால் போதும் என திட்டமிட்டுள்ளது.

படத்துக்கான பட்ஜெட் தொகையில் பெரும் பகுதியை தமிழகம் தவிர்த்த பிற உரிமைகள் விற்பனை மூலம் நெருங்கி விட்டது தயாரிப்பு நிறுவனம். லாபம் இல்லை என்றாலும் நஷ்டம் இன்றி 2.0 கணக்கை முடிக்க முயற்சிக்கிறது லைகா.

இன்று மாலைக்குள் உலகம் முழுவதும் 2.0 க்கான திரையரங்குகள் எண்ணிக்கை உறுதிப்படுத்தபடும் என எதிர் பார்க்கப்படுகிறது. அந்த எண்ணிக்கை தெரிந்து பின் 2.0 முதல் நாள்மொத்த வசூல் எவ்வளவு என்பதை தோராயமாக மதிப்பிட இயலும்.

 தமிழகத்தில் முதல் நாள் எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் 40 கோடி ரூபாய்.