’ஈகோ’என்கிற இரண்டெழுத்து ஒரு காதல் ஜோடியை என்ன பாடுபடுத்தும் என்கிற அரதப்பழசான ஒரு கதையை 100 சதவிகிதம் அப்படியே தூசிதட்டி எடுத்திருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் விதமாகவே இப்படத்துக்கு ‘100 % காதல்’என்று பெயரிட்டிருக்கிறார்கள் போலும். வழக்கமாக இரண்டு படிகள் ஏறினால் மூன்று படிகள் சறுக்கும் ஜீ.வி.பிரகாஷ், இதற்கு முன் நல்ல பெயர் சம்பாதித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’பெயரை இப்படத்தின் மூலம் கொச்சைப் படுத்தியிருக்கிறார்.

கதை? எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பிலும் நம்பர் ஒன்னாகவே இருக்கிறார். அவருடைய அத்தைபெண் ஷாலினி பாண்டே, ஜீ.வி.பிரகாஷ் வீட்டிலேயே தங்கிப் படிக்கிறார். கற்றுக்கொடுப்பவர்களிடமே வித்தையைக் காட்டுவார்களே அதுபோல் படிப்பில் ஜீ.வியையே மிஞ்சுகிறார். அடுத்து கதையில் ஒரு வில்லன் தேவைப்படுவதால்  அவர்கள் இருவரையும் தாண்டி அதே கல்லூரியில் படிக்கும் யுவன்மயில்சாமி  முதல்நிலை எடுக்கிறார்.

முதல் இடத்தை மட்டும் பறித்துக்கொண்டால் போதுமா? அடுத்து ஜீ.வியின் காதலி ஷாலினி பாண்டேவையும் தன் வசமாக்கிக்கொள்ள அவர் முயல அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படம். என்னவெல்லாம் நடக்கிறது என்று கேட்காதீர்கள். என்னென்னவெல்லாமோ நடக்கிறது.

ஸ்ட்ரிக்ட் ஆபிசராக ஜி.வி.பிரகாஷ் அறிமுகமாகிறார். அரட்டல் உருட்டல் என்று அதகளம் செய்யும் ஜீ.வி,ஓரிடத்தில் யார்றா ரெண்டாவது? எனத் தெனாவெட்டாகக் கேட்கும்போது ’நீதான்’ என்கிற பதிலில் அடைகிற அதிர்ச்சி பக்கென சிரிக்க வைக்கிறது.ஷாலினிபாண்டேயிடம் தன் காதலைப் பற்றி விவரிக்கும் காட்சியில் ஜீ.வியின் நடிப்பில் இளமை ஊஞ்சலாடுகிறது. ஆனால் மொத்த ரிசல்டாகப் பார்த்தால் ஜீ.விக்கு இப்படம் ஒரு சறுக்கல்தான்.

ஷாலினிபாண்டே இடையழகைக் காட்டி ஈர்க்கிறார். அவரை விட அவருடைய இடையை படம் நெடுகக் காட்டி ரசிகர்களை அநியாயத்துக்கு சோதிக்கிறார் இயக்குநர்.

 ஜீ.வி.பிரகாஷ் வீட்டில் இருக்கும் ஆறு குழந்தைகள். அவர்கள் யார்? எதற்காக அங்கே இருக்கிறார்கள்? என்பது புரியாத புதிர். நாசர், ஜெயசித்ரா, தலைவாசல் விஜய், ரேகா, ஆர்.வி.உதயகுமார், மனோபாலா, அப்புக்குட்டி,மனோபாலா, தம்பிராமையா என படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேருமே குணச்சித்திர நடிகர்கள் என்பதால் பல குணச்சித்திரக் காட்சிகளை வைத்து நம்மைக் கொடுமைப்படுத்துகிறார்கள்.

ஆர்.கணேஷ் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.ஜீ.வி.பிரகாஷே இசையமைத்திருக்கிறார். நடிப்போடு ஒப்பிட்டால் இசை மூலம் கொஞ்சம் குறைவாக சோதிக்கிறார். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம். 1982லிருந்து ‘90க்குள் எடுத்து வெளியிட்டிருக்கவேண்டிய ஒரு படத்தை 30 வருடங்கள் கழித்து எடுத்திருக்கிறார்கள். 50% சோதனை 50% வேதனை 100% ஷாலினி பாண்டேவின் இடுப்பு...