கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் காலடி எடுத்து வைத்து இன்றோடு பத்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தனக்கு வாழ்த்துக்கள் கூறிவரும் அனைவருக்கும் மிக சின்சியராக தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் அவர்.

குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் தலைகாட்டியிருந்தாலும் நாயகியாக ஸ்ருதி முதன்முதலில் அறிமுகமானது  ‘லக்’[2009] என்ற இந்திப்படத்தில். அடுத்து ‘ஓ மை ஃப்ரண்ட், ‘அனகனக ஓ தீருடு’ஆகிய இரு தெலுங்குப் படங்களில் நடித்து 4 வது படமாகவே தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ்,சூர்யா கூட்டணியின் ‘7ம் அறிவு’படத்தின் மூலம் வந்தார். இந்த 10 ஆண்டுகளில் 5 மொழிகளில் 26 படங்களில் நடித்திருக்கும் ஸ்ருதி இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். சன் தொலைக்காட்சியில் டாக் ஷோ ஒன்றை நடத்திய அவர் மிக விரைவில் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இடையில் சில காலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து வந்த ஸ்ருதி தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’படத்தில் நடித்துவருகிறார். இன்று அவர் திரையுலகிம் நுழைந்து 10 ஆண்டுகள் ஆனதை ஒட்டி குவிந்த வாழ்த்துக்களால் நெகிழ்ந்துபோம ஸ்ருதி,...“நான் திரையுலகில் ஒரு நடிகையாக பத்தாண்டுகளை நிறைவு செய்கிறேன். நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கடினமாக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் சிறப்பாகச் செயல்பட்டு என்னை ஆதரிக்கும் அனைவரையும் பெருமையடையச் செய்வேன். நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும் நிறைய மாறிவிட்டேன். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.