மூன்றே மூன்று அவித்த முட்டைகளுக்கு, அதிலும் வெறும் வெள்ளைக் கரு மட்டும் கேட்ட முட்டைகளுக்கு, ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று 1672 ரூபாய் பில் போட்டுள்ளது. அந்த அதிர்ச்சி செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபல இந்தி இசையமைப்பாளரும் பாடகருமான ஷேகர்.

பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ், கடந்த சில மாதங்களுக்கு முன் நட்சத்திர ஓட்டல் ஒன்று இரண்டு வாழைப் பழங்களுக்கு ரூ.422 வசூலித்ததாக ட்விட்டரில் ஒரு செய்தி பகிர்ந்திருந்தார். அச்செய்தி பின்னர் பெரும் சர்ச்சையாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பான டாபிக் ஆன நிலையில், அந்த ஹோட்டலுக்கு ரூ 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல இந்தி இசை அமைப்பாளர்கள் விஷால்-ஷேகர்களில் ஒருவரான ஷேகர் ராவ்ஜியானி, தனது சமூக வலைத்தள கணக்கில், பில் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அகமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலான ஹயாத் ரீஜென்ஸியில் அவர் மூன்று அவித்த முட்டைகளை ஆர்டர் செய்திருந்தார். அதற்கான பில், ஜி.எஸ்.டி வரி, சேவை வரி உட்பட பல வரிகளுடன் சேர்த்து 1672 ரூபாய். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், மூணு முட்டைகளுக்கு இவ்வளவு தொகையா Eggxorbitant? என்று அதிர்ச்சி தெரிவித்திருந்தார்.

அவரது அந்தப் பதிவுக்குக் கீழ் வழக்கம்போல் கிண்டலும் கேலியும் குவிய, அவர்களில் ஒருவர், ‘நீங்க சாப்பிட்ட முட்டை போட்ட கோழி ஒருவேளை நடிகர் ராகுல் போஸ் சாப்பிட்ட ஹோட்டலோட காஸ்ட்லி வாழைப்பழம் சாப்பிட்டு வளந்துருக்கும்’என்று கிண்டலடித்திருக்கிறார்.