ரஜினி,ஷங்கர் காம்போவின் மூன்றாவது படமான ‘2.0’ ரிலீஸாக சரியாக இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் படத்தின் சென்ஸார் நேற்று முடிவடைந்ததாக தகவல்கள் வந்திருக்கின்றன. சென்ஸார் குழுவினர் படத்தில் இடம்பெறும் ’ஒன்பது’ என்ற வார்த்தையை நீக்குவது உட்பட  சில திருத்தங்கள் சொல்லியிருப்பதால் படத்திற்கு என்ன கேடகிரியில் சர்டிபிகேட் தரப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்படவில்லை.

சென்ஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ‘2.0’ வின் நீளம் இப்போதைக்கு 2 மணி நேரம் 29 நிமிடங்கள் ஓடுகிறதாம். இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே இதுதான் மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக இருக்கும். காட்சிகளில் பெரிய அளவில் கைவைக்காத தணிக்கைக்குழுவினர் 
வசனங்களில் தாராளமாகக் கைவைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

 ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதுபோக மிக முக்கியமாக ஒன்பது என்ற வார்த்தையை நீக்கச்சொல்லி சென்ஸார் போர்டு அறிவுறுத்தியுள்ளது என்பதால் படத்தில் திருநங்கைகள் குறித்து ஷங்கர் சர்ச்சையான காட்சிகள் எதுவும் வைத்திருக்கிறாரோ என்று சந்தேகம் கிளம்பியிருக்கிறது.