Internship ஆர்பிஐ சம்மர் இன்டர்ன்ஷிப் 2026 அறிவிப்பு. மாதம் ரூ.20,000 உதவித்தொகை. கல்லூரி மாணவர்கள் டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாணவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. 2026-ம் ஆண்டிற்கான 'சம்மர் இன்டர்ன்ஷிப்' (Summer Internship) அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மத்திய வங்கியின் செயல்பாடுகளை நேரில் அறிந்துகொள்ளவும், நிஜ உலகப் பொருளாதாரச் சூழலில் பணிபுரியவும் இது மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

கல்வித் தகுதி மற்றும் நிபந்தனைகள்

பொருளாதாரம் (Economics), நிதி (Finance), மேலாண்மை (Management), புள்ளியியல் (Statistics), வணிகம் (Commerce), சட்டம் (Law) மற்றும் வங்கிச் சார்ந்த படிப்புகளில் முதுகலை பட்டம் (Postgraduate), 5 வருட ஒருங்கிணைந்த படிப்பு அல்லது இளங்கலை தொழில்முறைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். முக்கியமாக, தங்கள் படிப்பின் இறுதி ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் (Penultimate year) படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள். அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.

மாதம் ரூ.20,000 உதவித்தொகை

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையாக (Stipend) வழங்கப்படும். தங்குமிட வசதியை வங்கி வழங்காது. இருப்பினும், வெளியூர் மாணவர்களுக்குப் பயிற்சி இடத்திற்குச் சென்று வர ரயிலில் ஏசி 2- டயர் கட்டணம் (AC II-Tier return rail fare) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி

இந்த இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 15, 2025 கடைசி நாளாகும். ஆர்வமுள்ள மாணவர்கள் opportunities.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் புகைப்படம், கையெழுத்து, அடையாள அட்டை மற்றும் கல்லூரியின் போனஃபைட் சான்றிதழ் (Bonafide Certificate) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தேர்வு முறை எப்படி?

விண்ணப்பித்த மாணவர்களிலிருந்து தகுதியானவர்கள் பட்டியலிடப்பட்டு (Shortlisting), அவர்களுக்கு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதங்களில் நேர்காணல் நடத்தப்படும். இறுதித் தேர்வு முடிவுகள் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 125 மாணவர்கள் வரை இந்தப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பயிற்சி காலம் மற்றும் பணிகள்

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் 2026 ஏப்ரல் முதல் ஜூலை வரை சுமார் 3 மாதங்களுக்குப் பயிற்சி பெறுவார்கள். வங்கி ஒழுங்குமுறை, நாணயக் கொள்கை, நிதி நிலைத்தன்மை மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற முக்கியத் துறைகளில் நிபுணர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.