UPI பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. UPI பரிவர்த்தனைகளில் எந்தக் கூடுதல் கட்டணமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UPI கட்டணம் குறித்த வதந்திகள் - நம்பவே நம்ப வேண்டாம்!
சமூக வலைதளங்களில் இப்போது பரவி வரும் ஒரு முக்கிய செய்திக்கு மத்திய அரசு நேரடியாக விளக்கம் அளித்துள்ளது. UPI (Unified Payments Interface) தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வழிமுறையாக மாறிவிட்டது. இதனால் பணம் செலுத்தும் முறை மிகவும் எளிமையாகியுள்ளது.
இருப்பினும் சமீப காலமாக சமூக ஊடகங்களில் மற்றும் பல இடங்களில், UPI மூலம் பணம் செலுத்தும்போது கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் முயற்சிகள் நடப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இது குறித்து நிதி அமைச்சக சமூக ஊடகத்தின் X தளத்தில் அனைத்து வகையான யூகங்களையும் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அரசு ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும், UPI பரிவர்த்தனையில் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் கூறியுள்ளது.இது போன்ற யூகங்களை பரப்புவதன் மூலம் தேவையற்ற அச்சத்தை உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது என்று நிதி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த விளக்கம், UPI பயனாளர்களிடம் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
UPI பரிவர்த்தனை எண்ணிக்கை சாதனை
2025 ஜூன் மாதத்தில் Visa-வைவிட அதிகமாக UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஜூன் 1-ம் தேதி 64.4 கோடி UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றன, மேலும் அதற்கடுத்த நாள் இந்த எண்ணிக்கை 65 கோடிக்கு மேல் சென்றது. இது கடந்த ஆண்டு நிகழ்ந்த 64 கோடி பரிவர்த்தனைகளைவிட அதிகமாகும்.
புதிய UPI அம்சங்கள் மற்றும் சர்வதேச விரிவாக்கம்
மோடி தலைமையிலான NDA அரசின் 11 ஆண்டுகள் நிறைவு ஆனதை முன்னிட்டு வெளியிடப்பட்ட புக்க்லெட்டில், இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை பல்வேறு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியின் வெற்றிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
2025 மார்ச் மாதத்தில், 1,830.151 கோடி UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இவை ₹24.77 லட்சம் கோடி மதிப்புடையது. இதில் சுமார் 50% சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் ஆக உள்ளன என்பது, சாதாரண மக்களுக்கு இது எளிதாகக் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
நேரடி நலவாரிய தொகுப்பான DBT குறித்த புக்லெட்டிலும், மோடி அரசு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தி, ஊழலை தடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. தெறிவாகச் சொல்வதானால், UPI பரிவர்த்தனை கட்டணங்கள் குறித்த யூகங்களை நம்ப வேண்டாம் என அரசு அதற்கு உறுதியான மறுப்பு தெரிவித்துவிட்டது!