share market today :மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக கரடியின் பிடியில் சிக்கி லாபத்தை இழந்து வருகின்றன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக கரடியின் பிடியில் சிக்கி லாபத்தை இழந்து வருகின்றன. 

அமெரிக்க நிலவரம்

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தஅந்நாட்டு பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்திவருவது உலக நாடுகளின் சந்தைகளில் எதிரொலித்து வருகிறது. 

பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியது காரணமாக இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்தது. இதனால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வகையில் சரிந்தது.

ரிசர்வ் வங்கி

நாட்டில் பணவீக்கம் அதிகரித்ததைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி வட்டியை 40 புள்ளிகள் உயர்த்தியது சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல சந்தை மீண்டு வருகிறது. 

கடும் ஏற்ற இறக்கம்

மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை சென்செக்ஸ் 100 புள்ளிகள் ஏற்றத்துடன்தான் தொடங்கி பின்னர் சரியத் தொடங்கியது. இன்று வர்த்தகம் முழவதும் மும்பை மற்றும் தேசியப்பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றஇறக்கத்துடன் ஊசலாட்டத்துடனே காணப்பட்டது.
மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 105 புள்ளிகள் சரிந்து, 54,364 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 61 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 16,240 புள்ளிகளில் முடிந்தது. 

உலோகம் பெரும் சரிவு

30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில், 10 நிறுவனப் பங்குகள் ஏற்றத்திலும், 20பங்குகள் சரிவிலும் முடிந்தன. இந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி, கோடக் மகிந்திரா, ஹெச்டிஎப்சி வங்கி, ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன.

குறிப்பாக டாடா ஸ்டீல்,சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, பவர்கிரிட், ஐசிஐசிஐ, டைட்டன், இன்போசிஸ், ரிலையன்ஸ் பங்குகள் சரிவில் உள்ளன. டாடா ஸ்டீல் பங்குகள் மதிப்பு 7சதவீதம் சரிந்தது. நிப்டியில் உலோகத்துறை 5 சதவீதம் சரிந்தது.
நிப்டியில் உலோகத்துறை பங்குகள் 5.6 சதவீதமும், மின்துறை பங்குகள் 4 சதவீதமும் சரிந்தன. ரியல்எஸ்டேட் துறை 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச்சந்தித்தன