share market today :சர்வதேச காரணிகள், சர்வதேச சந்தை நிலவரத்தின் தாக்கத்தால் தேசியப் பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
சர்வதேச காரணிகள், சர்வதேச சந்தை நிலவரத்தின் தாக்கத்தால் தேசியப் பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
அமெரிக்க நிலவரம்
அமெரிக்காவில் வரலாறு காணாத பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 25 புள்ளிகளை வட்டியில் உயர்த்திய நிலையில் நேற்றுமுன்தினம் 50 புள்ளிகளை உயர்த்தியது.

ஆனால், அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த வட்டிவீத உயர்வு போதாது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் வரும் மாதங்களில் வட்டிவீதம் மேலும் உயரும் என்ற அச்சம் நிலவியதால், அமெரிக்காவின் நாஷ்டாக் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது
அமெரிக்கப் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்ததன் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் பிரதிபலிதித்து அங்கு வர்த்தகம் வீழ்ச்சியில் முடிந்தது.
ரிசர்வ் வங்கி
இந்தியாவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி திடீரென நேற்று முன்தினம் வட்டிவீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. அன்றைய தினம் பங்குச்சந்தையில் மோசமான சரிவு இருந்தது. ஆனால், நேற்று வர்த்தகத்தொடக்கத்தில் ஏற்றமாக இருந்தபோதிலும் பிறபகலில் சரிவு ஏற்பட்டு, மாலை வீழ்ச்சியுடன் வர்த்தகம் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு இன்று காலை இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1019 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 54,682 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 310புள்ளிகள் குறைந்து, 16,421 புள்ளிகளில் வர்த்கத்தை நடத்தி வருகிறது.
![]()
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 துறைகளும் சரிவை நோக்கியுள்ளன. பஜாஜ் ட்வின்ஸ், மாருதி, விப்ரோ, அல்ட்ராடெக் சிமென்ட், ஹெச்சிஎல் டெக், ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஹெச்யுஎல், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனப் பங்குகள் 3சதவீதம் வீழ்ச்சி அடைந்து சரிவில் முடிந்தன. டாடா மோட்டார்ஸ், ஹின்டால்கோ, அப்பலோ மருத்துவமனை ஆகிய பங்குகள் நிப்டியில் சரிவில் உள்ளன.
நிப்டியில் நுகர்வோர் பொருட்கள் துறை, ரியல்எஸ்டேட், தகவல்தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், நிதிச்சேவை, உலோகத்துறை ஆகியவை 2 முதல் 3 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன. மும்பைப் பங்குச்சந்தையில் 2,360 பங்குகள் சரிவில் உள்ளன 490 பங்குகள் ஏற்றத்துடன் நகர்கின்றன, 80 பங்குகள் மாற்றமில்லாமல் உள்ளன
