share market today : தேசிய மற்றும் மும்பைப் பங்குசந்தைகளில் இன்று காலை தொடங்கிய ஏற்றம் மாலை வரை நீடித்து, உற்சாகத்துடன் உயர்வுடன் வர்த்தகம் முடித்தது.
தேசிய மற்றும் மும்பைப் பங்குசந்தைகளில் இன்று காலை தொடங்கிய ஏற்றம் மாலை வரை நீடித்து, உற்சாகத்துடன் உயர்வுடன் வர்த்தகம் முடித்தது.
முதலீட்டாளர்கள் உற்சாகம்
சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, நிப்டியில் உள்ள 50 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளால் முதலீட்டாளர்கள் உற்சாகத்துடன் முதலீட்டில் ஈடுபட்டதால் சந்தையில் ஏற்றம் காணப்பட்டது.

மாதக் கடைசி என்பதால், f&o கணக்கு முடிப்பு இருக்கும் என்பதால் பங்குச்சந்தையில் ஊசலாட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலை தொடங்கிய உயர்வு மாலை வரை குறையாமல்நீடித்தது.
சர்வதேச காரணிகள்
அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக் நேற்று ஏற்றத்துடன் முடிந்ததுஉலகளவில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததால், தொழில்நுட்பத்துறை பங்குகள் ஏற்றம் அடைந்தந. இந்த ஏற்றத்தின் எதிரொலி ஆசியப்பங்குச் சந்தையிலும் இருந்தது, இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.
ஆசியப் பங்குச்சந்தையில் ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்,தென் கொரியப் பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடனே வர்த்தகம் முடிந்துள்ளது. இந்த எதிரொலி இன்று காலை இந்தியப் பங்குச்சந்தைகளிலும் காணப்பட்டது

காலாண்டு முடிவுகள்
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும்முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்தது. இந்த ஏற்றம் கடைசிவரை குறையவில்லை. பஜாஜ்பின்சர்வ் நிறுவனத்தின் 4-வது காலாண்டில் 37 சதவீதம் நிகர லாபம் உயர்வு, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் 4-வது காலாண்டு 4 சதவீதம் அதிகரிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. இதனால் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கிக் குவித்தனர்.
ஏற்றம்
மாலை வர்த்தகம் முடிவில், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 702 புள்ளிகள் உயர்ந்து, 57,521 புள்ளிகளில் ஏற்றத்துடன் முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி206 புள்ளிகள் அதிகரித்து, 17,245 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகத்தை முடித்தது.

30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 4 பங்குகள் மட்டுமே சரிவில் முடிந்தன. ஹெச்டிஎப்சி, ஹெச்சிஎல்டெக், மகிந்திராஅன்ட் மகிந்திரா, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.
லாபம்
மாறாக மற்ற 26 பங்குகளும் லாபத்தோடு வர்த்தகத்தை முடித்தன. நிப்டியில் உள்ள 50 பங்குகளில் 45 பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. இந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎப்சி லைப், எஸ்பிஐ லைப், ஏசியன் பெயின்ட்ஸ், யுபிஎல், பவர் கிரிட், லார்சன் அன்ட் டூப்ரோ, என்டிசிபி, எஸ்பிஐ, இன்போசிஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபமீட்டன.

பங்குச்சந்தையில் 1594 பங்குகள் மதிப்பு உயர்ந்தது, 1729 பங்குகள் மதிப்பு சரிந்தது, 104 பங்குகள் மதிப்பு மாறவில்லை. நிப்டியில், எப்எம்சிஜி, மின்துறை, ஆட்டமொபைல், முதலீட்டுப் பொருட்கள் ஆகிய ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம்வரை உயர்ந்தன.
