share market today: மார்ச் மாதத்தில் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள்(எப்பிஓ) ரூ.41ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 

மார்ச் மாதத்தில் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள்(எப்பிஓ) ரூ.41ஆயிரம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 

முதலீடு

தொடர்ந்து 6-வது மாதமாக அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்து முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தும் என்ற அச்சம், ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பதற்றம் ஆகியவற்றால் முதலீடு திரும்பப் பெற்றது நடந்துள்ளது

அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வது அடுத்துவரும் மாதங்களிலும் தொடரலாம். அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவில் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணிகளும் முதலீடு வெளியே செல்வதைத் தூண்டும்.

ரூ.41 ஆயிரம் கோடி

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.41 ஆயிரத்து 123 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.35,592 கோடி, ஜனவரியில் ரூ.33ஆயிரத்து 303 கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டில், மார்ச்சில் திரும்பப் பெற்ற முதலீடுதான் அதிகபட்சமாகும். 

கடந்த 6 மாதங்களாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். இதுவரை அதாவது 2021 அக்டோபர் முதல் 2022 மார்ச் மாதம் வரை ரூ.1.48 லட்சம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். 

காரணம் என்ன

அப்சைட்அல் எனும் தரகு நிறுவனத்தின் நிறுவனர் அட்டானு அகர்வால் கூறுகையில் “ அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம் மாற்றப்பட்டதுதான் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவு முதலீட்டை திரும்பப் பெறக் காரணம். இது தவிர, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷ்யா உக்ரைன் போர் போன்ற காரணிகளும் முதலீட்டாளர்கள் முதலீட்டை வெளியே எடுக்கக் காரணமாகும்.

அடுத்துவரும் மாதங்களிலும் முதலீடு வெளியே எடுத்தல் தொடரும். குறிப்பாக உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்றவையும் முதலீட்டாளர்களைத் தூண்டிவிடும்.

வளர்ந்து வரும் சந்தைகளான இந்தியாவில் மட்டுமல்ல தைவான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா பங்குச்சந்தையிலிருந்தும் மார்ச் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவு முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்தார்.