- Home
- Business
- சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான சரியான வழிமுறைகள் என்ன? முழு விவரம் இதோ.!
Property Deed Correction Procedure : நம்முடைய சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய முடியுமா? அதற்கான முறைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Error Correction in Property Document
நாம் பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் எத்தனை முறை படித்து பார்த்தாலும் சில தவறுகள் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும். பத்திரம் பதிவு செய்த பின்னர் அதை பொறுமையாக வாசித்துப் பார்க்கும் பொழுது பிழைகள் நம் கண்ணுக்கு தெரியவரும். அப்படிப்பட்ட நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பலருக்கும் குழப்பம் இருக்கும். அதற்கான விரிவான விளக்கங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சொத்து பத்திரத்தில் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
உங்களுடைய சொத்து சார்ந்த பத்திரத்தில் எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் இருந்தால் அதை சரி செய்ய ‘பிழை திருத்தல் பத்திரம்’ பயன்படுத்தப்படுகிறது. இதனை ‘சரிப்படுத்தும் ஆவணம்’ அல்லது ‘சீர் செய்யும் ஆவணம்’ என்று அழைக்கின்றனர். கிரயம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில், பவர் பத்திரம், அடமானம், விடுதலை, ஒப்பந்தம், அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களுக்கும் இந்த ‘பிழை திருத்தல் பத்திரம்’ போட முடியும்.
சாதாரண பிழை திருத்தல் பத்திரம்
பட்டாவையும், பத்திரத்தையும் பார்க்கும் பொழுது பட்டாவில் உள்ள பெயரும் பத்திரத்தில் உள்ள பெயரும் ஒன்றாக இல்லை என்றால் சொத்தை வாங்க பலர் தயங்குவர். இதற்காக சாதாரண பிழை திருத்தல் பத்திரம் போடப்படுகிறது. இன்னார் வீட்டிற்கு வடக்கே என எழுதுவதற்குப் பதிலாக இன்னார் வீட்டிற்கு கிழக்கே என தவறாக எழுதுவது, பட்டா எண்ணை பத்திரத்தில் தவறாக குறிப்பிடுவது, சர்வே எண்ணை தவறாக பதிவிடுவது, முன்புள்ள பத்திரங்களில் எண்களை தற்போது எழுதும் போது தவறாக எழுதுவது, இன்சியல், தந்தை பெயர் தவறாக எழுதுவது, கதவு எண், ஊர் பெயர், தன்னுடைய பெயர் ஆகியவற்றை தவறாக எழுதுவது, கிரயப் பத்திரத்தில் மேப் விடுபட்டு விடுவது, மின் இணைப்பு எண்ணை மாற்றி எழுதுவது, தெரு பெயர், திசைகள், எல்லைகள் போன்ற தவறுதல்களை சாதாரண பிழை திருத்தல் பத்திரம் மூலம் திருத்த முடியும். இந்த பிழை திருத்தல் பத்திரத்திற்கு முத்திரைத்தாள் கட்டணம் நூறு ரூபாய் மட்டுமே.
உரிமை மாற்றம் பிழை திருத்தல்
அதேசமயம் உரிமை மாற்றம் பிழை திருத்தலின் பொழுது இரண்டு ஏக்கர் ஒரு சென்ட் என்பதை ஒரு ஏக்கர் இரண்டு சென்ட் என்று மாற்றி எழுதி விடுவது போன்ற பிழையால் பட்டா மாறுவது தடையாகிவிடும். இதனை திருத்துவதற்கு ‘உரிமை மாறும் பிழைத்தெடுத்தல் பத்திரம்’ போட வேண்டும். இந்த பத்திரம் எழுதும் போது சரியான அளவினை குறிப்பிட்டு, அதற்கு உண்டான சந்தை மதிப்பை வைத்து கட்டணம் செலுத்தினால் தான் இந்த உரிமை மாறும் பிழை திருத்தல் பத்திரம் போட முடியும். குறைவான சதுர அடி நிலத்தை அதிக சதுர அடியாக எழுதிவிட்டு அதை திருத்தம் செய்யும்பொழுது சார் பதிவாளர் அலுவலகத்தில் கட்டிய முத்திரைத்தாளின் தொகையை திருப்பி பெற்றுக் கொள்ள முடியாது. சொத்தை பெற்ற நபர் பிழை திருத்தல் போட வேண்டிய சமயத்தில் உயிருடன் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளை வைத்து பிழை திருத்தல் பத்திரம் போடலாம்.
புதிய கிரய பத்திரம்
சொத்தை பெற்ற நபருக்கு வாரிசுகள் இல்லை என்றால் இரண்டாவது வாரிசுகள், மூன்றாம் வாரிசுகள் மூலம் பிழை திருத்தல் போடலாம். அதற்கும் வழியில்லை என்றால் நீதிமன்றத்தை தான் நாட வேண்டும். சொத்தைப் விற்ற நபர் உயிருடன் இருந்தும் பிழை திருத்தல் பத்திரம் போட வர மறுக்கிறார் என்றாலும் நீதிமன்றத்தை நாடியே தீர்க்க வேண்டும். சர்வே எண், நீள, அகல அளவுகள், விஸ்தீரணம் போன்ற அனைத்துமே பிழையாக இருந்தால் பிழை திருத்தம் பத்திரத்திற்கு பதிலாக புதிய கிரய பத்திரம் போட வேண்டி இருக்கலாம்.
நாமே திருத்தக்கூடாது
சில ஆவணங்களில் ஏற்படும் சிறு தவறுகள் உதாரணமாக சர்வே எண், மனை எண், இனிஷியல் தவறுகளை பத்திரப்பதிவு செய்துவிட்ட பிறகு கண்டுபிடித்து விட்டால் அதை அமிலம் வைத்து திருத்துவது, ஒயிட்னர் வைத்து திருத்துவது முற்றிலும் தவறானது. உதாரணத்திற்கு மனை எண் 10 என்பதற்கு பதிலமாஐ 11 என்று தவறாக இருந்தால் தாங்கள் பத்திரப்பதிவுக்கு பிறகு பத்திரத்தில் 10 என்று நீங்களாகவே திருத்திக் கொண்டாலும், பதிவு அலுவலக பராமரிப்பு ஆவணங்களில் 11 என்று இருக்கும். இதுபோன்று நீங்களே திருத்தம் செய்து கொள்வது சட்ட விரோதம் ஆகும். எனவே உங்கள் ஆவணங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை முறையாக பிழை திருத்தல் பத்திரம் மூலம் மாற்றிக் கொள்வதே சரியான முறையாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

