உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ளதையடுத்து, தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் காலை முதலே ஆட்டம் கண்டு 2 ஆயிரம் புள்ளிகளை இழந்ததில் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே போர் மூண்டுள்ளதையடுத்து, தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் காலை முதலே ஆட்டம் கண்டு 2 ஆயிரம் புள்ளிகளை இழந்ததில் முதலீட்டாளர்களுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகவே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டு கரடியின் ஆதிக்கம் இருந்தது. இந்நிலையில் இந்தியநேரப்படி காலை 6 மணிக்கு உக்ரைன் மீது போர் தொடுக்கவும், ராணுவ நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்துக்கு உத்தரவிட்டார்.
அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருந்த ரஷ்ய ராணுவத்தினர் உக்ரைன் எல்லைக்குள் சென்று தாக்குதலைத் தொடங்கினர். உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியப் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தையில் சென்சென்க்ஸ் 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டியில் 600 புள்ளிகளும் படுமோசமாக வீழ்ச்சி அடைந்தன.
மும்பைப் பங்குச்சந்தையில் காலையில் ஏற்பட்ட சரிவு தொடர்ந்து வருகிறது. சென்செக்ஸ் 2,024 புள்ளிகள் சரிந்து, 55,207 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது. அதேபோல தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 573 புள்ளிகள் வீழ்ந்து, 16,490 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.
இன்று வர்த்தகத்தில் 3,057 பங்குகள் வர்த்தகத்துக்கு வந்ததில், 2,758 பங்குகள் பெரும் சரிவில் முடிந்தன, 95 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. 227 பங்குகள் வாரஇறுதி என்பதால், ஊசலாட்டத்தில் உள்ளன.

பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது, அதன் மதிப்பு ரூ.256 லட்சம் கோடியாக இருந்தநிலையில் இன்று காலையில் ஏற்பட்ட பெரும் சரிவால் பங்குச்சந்தையி்ன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.10லட்சம் கோடி சரிந்து, ரூ.246 லட்சம் கோடியாக வீழ்ந்தது.
பிப்ரவரி 16ம் தேதியிலிருந்து பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்ளுக்கு ரூ.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலரை எட்டிய நிலையில், இன்று மேலும் அதிகரித்து, 103 டாலராக உயர்ந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலரைக் கடந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கண்டு முதலீட்டாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ஈக்யூனாமிக்ஸ் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் ஜி.சொக்கலிங்கம் கூறுகையில் “ உக்ரைனில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் சில வாரங்களுக்குத் தொடரும். உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நீண்டகாலத்துக்கு நீடிக்காது. ரஷ்யாவின பொருளாதாரம் சிறியது.

நீண்டகாலத்துக்கு போரைத் தாக்குப்பிடிக்க முடியாது. ஏற்கெனவே அமெரிக்கா,பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் நிதித்தடைகளை ரஷியா மீது விதித்துள்ளன. போர் காரணமாக ரஷ்யாவின் ரூபில் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது, பங்குச்சந்தையும் எப்போதும் இல்லாத அளவாக 30% வீழ்ந்துள்ளது. ஆதலால், போர் நீண்டகாலம் நீடித்தால் பொருளாதாரம் மோசமாகும். அதேசமயம், இந்தபோரால் இந்தியப்பங்குச்சந்தை, உலகச்சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளன. இனிவரும் நாட்களில் மேலும் 3 %வரை வீழ்ச்சியைச்சந்திக்கலாம். ஆனால்,சூழலுக்கு ஏற்ப தன்னை தகவைத்துக்கொள்ளும்” எனத் தெரிவித்தார்
