இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு, புதிய 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளது. கள்ள நோட்டு தயாரிப்பாளர்கள் தற்போது பரவலாகப் புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளை இலக்காகக் கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு, தற்போது புதிய ரூ.500 நோட்டுகளின் கள்ள நோட்டுப் புழக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, தற்போது நாட்டில் அதிகமாகப் புழகத்தில் உள்ள கள்ள நோட்டுகள் 500 ரூபாய் நோட்டுதான்.
மகாத்மா காந்தி புதிய வரிசையில் (New Mahatma Gandhi series) உள்ள ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 2024-25 நிதியாண்டில் 1,17,722 ஆக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுகளில் கண்டறியப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கணிசமான உயர்வாகும்.
2022-23 நிதியாண்டில் 91,110 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டன. 2023-24 நிதியாண்டில் 85,711 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டன. 2024-25 நிதியாண்டில் 1,17,722 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டன.
500 ரூபாய் கள்ள நோட்டுகள்
ரூ.500 கள்ள நோட்டுகளின் அதிகரிப்பானது, புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகளின் கள்ள நோட்டுப் புழக்கம் சரிந்ததற்குப் பிறகு ஏற்பட்டுள்ளது.
ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டபோது அதன் கள்ள நோட்டுகளின் புழக்கம் உச்சத்தை எட்டியது. 2022-23 நிதியாண்டில் 9,806 ஆக இருந்த ரூ.2,000 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, 2023-24 நிதியாண்டில் 26,035 ஆக அதிகரித்தது. ஆனால், 2024-25 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 3,508 ஆகக் கூர்மையாகச் சரிந்தது.
இந்தத் தரவுகள், கள்ள நோட்டுகளைத் தயாரிப்போர் புழக்கத்தில் இல்லாத ரூ.2,000 நோட்டுகளில் இருந்து, பரவலாகப் புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுக்குத் தங்கள் கவனத்தை மாற்றியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.
சிறிய ரூபாய் நோட்டுகள்
சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளில் மாறுபட்ட போக்கு காணப்படுகிறது. ரூ.100 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 2020-21 நிதியாண்டில் 1,10,736 ஆக இருந்தது, அது 2024-25 நிதியாண்டில் 51,069 ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம், ரூ.200 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 24,245 இல் இருந்து 32,660 ஆக உயர்ந்துள்ளது.
அனைத்து மதிப்புள்ள பணத்தாள்களிலும் கண்டறியப்பட்ட மொத்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 2021-22 நிதியாண்டில் 2,30,971 ஆக இருந்தது, அது 2024-25 நிதியாண்டில் 2,17,396 ஆக லேசாகக் குறைந்துள்ளது. இருப்பினும், புதிய வரிசையில் உள்ள ரூ.500 நோட்டு இப்போது கள்ள நோட்டுப் புழக்கத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேசமயம், பழைய மகாத்மா காந்தி வரிசையிலான ரூ.500 நோட்டுகள் 2024-25 நிதியாண்டில் வெறும் ஐந்து மட்டுமே கண்டறியப்பட்டு, கிட்டத்தட்ட புழக்கத்தில் இருந்து நீங்கிவிட்டன.
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்
கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியுடன் (RBI) இணைந்து பணத்தாள்களின் பாதுகாப்பு அம்சங்களை (Security features) மத்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சட்டம், 1934 (RBI Act, 1934) பிரிவு 25-ன் கீழ், கள்ள நோட்டு தயாரிப்பாளர்களை விட ஒருபடி முன்னே இருக்க, புதிய வடிவமைப்புகள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை அறிமுகப்படுத்துவது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
