1990களில் ஒருவர் ₹1 லட்சத்திற்கு வாங்கிய JSW ஸ்டீல் பங்குகள் தற்போது ₹80 கோடியாக உயர்ந்துள்ளது. ரெடிட் பயனரின் தந்தை வாங்கி வைத்திருந்த பங்குகளின் சான்றிதழ்கள் பழைய ஆவணங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய JSW Steel பங்குகள் இப்போது ரூ.80 கோடி! பண மழையில் நனைந்த மகன்!

அதிர்ஷ்டம் கூறையை பிய்த்துக்கொண்டு கொட்டினால் எப்படி இருக்கும். கதைகளில் மட்டுமே கேள்விபட்ட இந்த நிகழ்வு உண்மையில் நடந்துள்ளது. ஆமாம் எப்போதே வாங்கிபோட்டு மறந்துபோன பங்குகள் பல கோடி ரூபாயாய் உயர்ந்து ஒருவரது கைகளில் விழுந்துள்ளது.ஒரு அசாதாரண சம்பவம் சமீபத்தில் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ரெடிட் (Reddit) பயனர் தனது தந்தை 1990களில் வாங்கிய JSW ஸ்டீல் பங்குகள் சான்றிதழ்களை வீட்டு பழைய ஆவணங்களில் இருந்து கண்டுபிடித்துள்ளார். அந்த பங்குகள் அப்போது ₹1 லட்சத்திற்கு வாங்கப்பட்டவை. தற்போது அந்த பங்குகளின் மதிப்பு 80 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

30 ஆண்டுக்கு பிறகு கிடைத்த பொக்கிஷம்

அந்த செய்தியை முதலீட்டாளர் சௌரப் தத்தா (Sourav Dutta) சமூக வலைதளமான X-இல் பகிர்ந்திருந்த நிலையில் இது வைரலாகி, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் "Reddit-ல் ஒரு நபர், தந்தை 1990களில் வாங்கிய ₹1 லட்சம் JSW பங்குகள் இப்போது ₹80 கோடி மதிப்பில் இருக்கிறது. 30 வருடத்திற்கு பிறகு விற்றதால் அதன் மதிப்பு கோடிகளில் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் நீண்டகால முதலீட்டின் அற்புத சக்தியை வெளிப்படுத்துகிறது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது அவரால் ஓய்வுபெற்று அமைதியாக வாழ முடியும்", "பங்கு ஸ்பிளிட், போனஸ், டிவிடெண்ட் ஆகியவை சேர்ந்து இந்த அளவு செல்வமாக உருவாகின்றன என சௌரப் தத்தா பதிவிட்டுள்ளனர். 

இதனை தொடர்ந்து நீண்ட கால முதலீடுகள் குறித்தும் அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதில், நல்ல நிறுவன பங்குகளை விரைவில் விற்க வேண்டாம் எனவும் அடிப்படை நிலை நல்ல நிலையில் இருந்தால், நேரமே செல்வத்தை உருவாக்கும் என்றும் முதலீட்டாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார். 1990களில் ₹1 லட்சத்தை பங்குகளில் செலவழித்துவிட்டு அதை மறந்துவிடும் நபர் என்றால், அந்த குடும்பம் ஏற்கனவே பணக்கார குடும்பமாக இருந்திருக்கும் என்றும் மற்றொரு தரப்பினர் எதிர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

JSW Steel – பங்குகள்

இப்போது, JSW ஸ்டீல் பங்குகள் விலை ரூ.1004.90 விலை காசுகளாக உள்ளது. அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடி. இந்த நிறுவனம், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு பெரும் வருமானத்தை அளித்துள்ளது.

பழைய பங்குகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

பழைய பங்குகள் இருந்தால் மீண்டும் அந்த பங்குகளை பெற விரும்பும் நபர்கள் கீழ்கண்ட கட்டங்களை பின்பற்ற வேண்டும். ஒரு Demat கணக்கு திறக்க வேண்டும். பின்னர் பங்குகளின் உரிமையை சான்று பெற வேண்டும். தொடர்ந்து பங்குகளை dematerialise செய்யலாம். சில நேரங்களில், Investor Education and Protection Fund (IEPF) வாயிலாக பங்குகளை மீட்கவும் முடியும். இந்த சம்பவம், முன்கணிப்பு, நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகியவை எப்படி தலைமுறை செல்வத்தை உருவாக்கும் என்பதை சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது. நீண்ட கால முதலீடு என்பது வெறும் பணம் அல்ல — அது பாரம்பரியமாகும்.