ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5 சதவீதமாகத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பணவீக்கம் உயரக்கூடும் என்பதால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் 6.5% ஆக வைத்திருக்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை அறிவித்த ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 8 முதல் மூன்று நாட்களாக நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன் முந்தைய இரண்டு கொள்கைகளில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருந்தார். மே 2022 முதல் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது.
பொய் தகவல் கொடுத்தவர்களுக்கு இனி போராத காலம் தான்! வேட்டு வைக்கும் வருமான வரித்துறை!
தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் வட்டி விகிதங்களை மாற்றம் செய்யாமல் இருக்க ஆர்பிஐ தீர்மானித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், "ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக வைத்திருக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. நமது பொருளாதாரம் நியாயமான வேகத்தில் தொடர்ந்து வளர்ந்து, உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. உலக வளர்ச்சிக்கு 15% பங்களிக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
பணவீக்கத்தை அடிப்படையாக வைத்தே வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்ப்போது மாற்றி அமைக்கிறது. சில்லறை விலை பணவீக்கம் 2 முதல் 6 சதவீதம் வரை இருக்கலாம் என்ற ரிசர்வ் வங்கி வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.
7.5 லட்சம் பேருக்கு ஒரே நம்பரா? ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மெகா முறைகேடு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்