பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைச் சுற்றி, ஜி ஸ்கொயர் நிறுவனம் நிலம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அந்நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம் பதிலடி கொடுத்துள்ளார். பரந்தூரில் தமக்கோ, தம் குடும்பத்தினருக்கோ ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என்றும், அதை நிரூபிப்பவர்களுக்கு அந்த நிலத்தை இலவசமாகத் தருவதாகவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
பரந்தூர் நில விவகாரம்.. குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜி ஸ்கொயர் பாலா போட்ட அதிரடி சவால்!
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் பின்னணியில் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் இருப்பதாக சில தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையின் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பல்வேறு இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியபோது, அப்பகுதி மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக ஏகனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.
ஜி ஸ்கொயர் நிலம் வாங்கியதா? ஆதாரம் கேட்ட நிறுவனர்.. சொன்ன பதில் என்ன?
இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜயும் பரந்தூர் சென்று பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதனிடையே தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றத்துக்குப் பிறகு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அரசு அறிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தரப்பினர், விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால் சென்னையின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என விமர்சனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புதிய குற்றச்சாட்டுகள் பரவின. பரந்தூர் பகுதியில் ஜி ஸ்கொயர் நிறுவனம் நிலம் வாங்கியிருப்பதாகவும், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய காரணங்களால்தான் விமான நிலையத் திட்டத்தை கைவிடும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும் சிலர் கருத்துகளை பதிவிட்டனர். சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் பேசப்பட்டதால் சர்ச்சை மேலும் அதிகரித்தது.
இந்த சூழலில், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால ராமஜெயம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தங்களது நிறுவனத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
“ஒரு சென்ட் நிலம் கூட இல்லை”
குறிப்பாக, பரந்தூர் பகுதியில் தனக்கோ, தனது குழந்தைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ ஒரு சென்ட் நிலம் கூட இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனை ஆதாரத்துடன் யாராவது நிரூபித்தால், அந்த நிலத்தை இலவசமாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னுடைய நிறுவனத்துக்கும் அரசியல் ரீதியாக குறிப்பிடப்படும் சில நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார். அந்தத் தொடர்பை நிரூபித்தால், ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பான அரசியல் விவாதங்களுக்கு மத்தியில், ஜி ஸ்கொயர் நிறுவனரின் இந்த சவால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வெளியாகுமா அல்லது இந்த விவகாரம் அரசியல் விமர்சனங்களுடன் முடிவடையுமா என்பது அடுத்தடுத்த நாட்களில் தெரியவரும்.


