கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 25% நிதி குறைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 25% நிதி குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 100-நாட்கள் வேலைத் திட்டத்துக்காக ரூ.98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் வரும் நிதியாண்டுக்கு ரூ.73 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டிலும் இதேதொகைதான்முதலில் ஒதுக்கப்பட்டாலும் பின்னர் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, நேரடியாக அவர்கள் வங்கிக்கணக்கில் ஊதியத்தை செலுத்தும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் பெறும் ஊதியத்தை பல்வேறு செலவுகளுக்கும் செலவிடும்போது கிராமப்புறப் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

அதிலும் 2020ம் ஆண்டும் கொரோனா பெருந்தொற்று வந்தபோது, கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு நேரடியாக பணத்தைக் கொண்டு சேர்ர்த்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியது இந்த 100நாட்கள் வேலைத்திட்டம்தான். அப்போது தாக்கல் செய்தபட்ஜெட்டில் ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது, ஏறக்குறைய 11 கோடி தொழிலாளர்கள் பயன் அடைந்தனர். 

ஆனால், 2021-22ம் ஆண்டு பட்ஜெட்(நடப்புநிதியாண்டு)தாக்கலில் இந்த நிதி ரூ.73ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது, ஆனாலும், சூழல் கருதி கூடுதலாக 25 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டிலும் இதே ரூ.73ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.

100 நாட்கள் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அளவு குறைக்கப்பட்டதால், இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படும், வேலை வழங்கும் நாட்களும் குறையும். இதன் காரணமாக கிராம மக்களிடம் வேலையின்மை ஏற்பட்டு, பணப்புழக்கம் குறையும், பொருட்களுக்கான தேவை குறைந்து, முடிவில் கிராமப்புறப் பொருளாதாரம் சரிவை நோக்கி நகரும்.

கேரள நிதி அமைச்சர் கே. பாலகோபால் கூறுகையில் “ நாடு மோசமான வேலையின்மைச் சூழலைச் சந்தித்துவரும்போது, 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு நிதியைக் குறைத்துள்ளார்கள். கடைசிப் பயனாளியை அடைவதற்கு 100நாட்கள் வேலைத்திட்டம் முக்கியமானது. கடந்த பட்ஜெட்டைப் போல இந்த பட்ஜெட்டைலும் அதே தொகைதான் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டத்தின் பாதியிலேயே நிதி தீர்ந்துவிடும், பல பணிகள் தேக்கமடையும்” எனத் தெரிவித்தார்

100 நாட்கள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 ஆயிரத்துக்கும் அதிகமான கோடி கூலி பாக்கி நிலுவையில் இருக்கிறது. ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தில் ஏறக்குறைய 10 கோடி பேர் அங்கீகார அட்டை வைத்துள்ளனர். பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியின் மூலம் வேலைவழங்க வேண்டுமென்றால், அதிகபட்சமாக 20 நாட்கள் மட்டுமே வேலைவழங்க இயலும். கூலி அதிகரிக்கும்பட்சத்தில் வேலைக்கான நாட்கள் இன்னும் குறையக்கூடும் என மஸ்தூர் கிசான் சங்காதான் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா ரேட்டிங் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் டி.கே.பந்த் கூறுகையில் “ கொரோனா லாக்டவுன் காலத்தில் கிராமப்புறப் பொருளாதாரத்தை பாதுகாத்தது 100நாட்கள் வேலைத்திட்டம்தான். மெதுவாக இப்போதுதான் பொருளாதாரம் இயல்புக்குவந்துள்ளது. 100நாட்கள் வேலைத்திட்டத்தின் நாட்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும்போது நிதி குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறப் பொருளாதாரத்தை வேகப்படுத்த இந்தத் திட்டத்து்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்” எனத் தெரிவி்த்தார்