- Home
- Business
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.! விரைவில் 3 குட் நியூஸ்.! அகவிலைப்படி உயர்வுடன் சம்பள உயர்வு.!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்.! விரைவில் 3 குட் நியூஸ்.! அகவிலைப்படி உயர்வுடன் சம்பள உயர்வு.!
DA Hike Update for Central Government Employees : மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு மற்றும் அரியர்ஸ் தொகை கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

DA Hike Update for Central Government Employees
மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு அறிவிப்பு தான், ஜனவரி 2026 - ஜூன் 2026 சுழற்சிக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண அதிகரிப்பு (DR) குறித்ததாகும். அரசு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வை அறிவிக்கிறது. ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையின் பொழுதும், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நவராத்திரி அல்லது தீபாவளி பண்டிகைகளின் போது வெளியாகின்றன.
ஏன் தாமதம்?
ஜனவரி 2026 ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எப்போது வரும் என்கிற எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களிடையே ஆர்வத்தையும், விவாதத்தையும் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஏற்கனவே உள்ள அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் அரசு இணைக்கப் போகிறதா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
2% உயரப்போகும் அகவிலைப்படி?
மத்திய அரசு ஊழியர்கள் தற்போதைய நிலவர 58% அகவிலைப்படியைப் பெறுகிறார்கள். பணவீக்க தரவுகளின் அடிப்படையில் ஜனவரி 2026 இல் தோராயமாக 2% அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60% ஆக அதிகரிக்கும். இந்த மதிப்பானது ஜனவரி 2025 டிசம்பர் 2025 வரை 12 மாத சராசரி அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி அகவிலைப்படி தோராயமாக 60.33% ஆக வருகிறது. இது ரவுண்டாக 60% ஆக கணக்கீடு செய்யப்படும்.
அடிப்படை சம்பளமும் உயரும்
மார்ச் 18 அல்லது 25ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்புகள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2% அதிகரித்து 60% கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு சதவீதம் அகவிலைப்படி அதிகரித்தால் சம்பள உயர்வும் ஏற்படும். அடிப்படை சம்பளம் ரூ.20,000 ஆக இருந்தால் சம்பளம் ரூ.32,000 ஆக அதிகரிக்கும். அகவிலைப்படி மார்ச் மாத இறுதிக்குள் அதிகரிக்ககூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜனவரி முதலான டிஏ அரியர்ஸ் தொகை மார்ச் மாத சம்பளத்துடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
அகவிலைப்படி உயர்வதால் கிடைக்கும் நன்மைகள்
அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது ஊழியர்களுக்கு பலவகையில் பலனளிக்கும் என்று ஊழியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன. அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். HRA, TA மற்றும் பிற கொடுப்பனவுகள் உயரும் வாய்ப்புகள் உண்டு. ஓய்வூதிய கணக்கீடுகளில் நேரடி நன்மை கிடைக்கும். எனவே எட்டாவது ஊதியக் குழு செயல்படுத்தும் வரை இடைக்கால நிவாரணமாக இதை செயல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஏழாவது சம்பளக் குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைந்தது. தற்போது எட்டாவது சம்பள குழு தனது பணிகளை தொடங்கியுள்ளது. இதன் முழுமையான செயல்பாட்டிற்கு மேலும் சில காலம் தாமதமாகலாம் என கூறப்படுகிறது.
மத்திய அரசு நிலைப்பாடு
அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும் என்று ஊழியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி திருத்தம் செய்யும் இந்த முறையானது பணவீக்கத்தை ஈடு செய்ய போதுமானது என அரசு நம்புகிறது. எனவே பெரிய கட்டமைப்பு மாற்றங்கள் தேவையில்லை என்பது அரசின் நிலைப்பாடாக உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

