மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனக்தின் மேபேக் GLS மற்றும் ஜி கிளாஸ் மாடல்கள் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் அறிவிப்பு.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது பாரம்பரிய ஜி கிளாஸ் மற்றும் அதிக ஆடம்பர வசதிகள் நிறைந்த மேபேக் GLS மாடல்களின் முன்பதிவுகளை அதிரடியாக நிறுத்தி இருக்கிறது. இரு மாடல்களும் இந்திய சந்தையில் விற்றுத் தீர்ந்ததாக மெர்சிடிஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இரு மாடல்களுக்கான முன்பதிவு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் தனது முதல் மேபேக் GLS 600 4மேடிக் மாடலை இந்திய சந்தைக்கு கொண்டு வந்தது. முதற்கட்டமாக 50 யூனிட்கள் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டன. எனினும், இவை அனைத்தும் வெளியீட்டுக்கு முன்னதாகவே விற்றுத் தீர்ந்தன. மேபேக் GLS மாடலின் இரண்டாம் கட்ட யூனிட்களை இந்த ஆண்டின் முதல் காலாண்டு இறுதியில் வினியோகம் செய்வதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்து உள்ளது.

இரண்டாம் தலமுறை AMG G63 மாடல் அக்டோபர் 2108 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. G 350 மாடல் இந்தியாவில் 2018 டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. மெர்சிடிஸ் G63 மாடலில் 4 லிட்டர், டுவின் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் AMG 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
G350d மாடலில் 2925சிசி, இன்லைன் 6 சிலிண்டர் பை-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 282 ஹெச்.பி. திறன், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜி வேகன் மாடல் 1979 முதல் உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜி கிளாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை உருவாக்கும் பணிகளையும் மெர்சிடிஸ் பென்ஸ் துவங்கிவிட்டது.

இதுதவிர மெர்சிடிஸ் மேபேக் GLS ஃபேஸ்லிஃப்ட் மாடல் சில மாதங்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இந்த மாடல் இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2023 வாக்கிலோ சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மெர்சிடிஸ் நிறுவனம் மேபேக் GLS, மேபேக் EQS கான்செப்ட், EQG கான்செப்ட் மாடல்களின் ஆல்-எலெக்ட்ரிக் வெரிஷனை காட்சிப்படுத்தி இருந்தது.
