தங்கம் பாரம்பரியமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டாலும், நீண்ட கால லாபத்தில் பங்குச்சந்தை முதலீடுகள், குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகள், சிறப்பாக செயல்படுகின்றன. 

இந்தியாவில் எல்லா சுபநிகழ்ச்சிகளிலும் முக்கிய இடம் பிடிப்பது தங்கம் என்றால் அது மிகையல்ல. காதுகுத்து முதல் கல்லயாணம் வரை தங்க ஆபரணங்கள் நிகழ்வில் முக்கிய இடம் பிடிக்கின்றன. அதன் காரணமாகவே நடுத்தட்டு மக்களும், அடித்தட்டு மக்களும் நகைக்கடையில் சீட்டு போட்டாவது தங்கத்தை வாங்கி வருகின்றனர். அவசரத்திற்கு யாரிடமும் கையேந்தாமல் பணத்தை ரெடி செய்ய தங்கம் உதவுவதால் அதனை எல்லோரும் விரும்புகின்றனர். அதனாலேயே தங்கத்தில் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.

தங்கத்தை முந்து பங்குச்சந்தை முதலீடுகள்

தங்கம் நல்ல முதலீடாக இருந்தாலும், பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளே நீண்ட கால நோக்கில் அதிக லாபத்தை கொடுக்கும் என சந்தை வல்லுணர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் பங்குச்சந்தை கடுமையாகச் சரியும்போதும் பணவீக்கம் அதிகரிக்கும்போதும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்குகின்றனர். பங்குச்சந்தைகள் சரியும் போது தங்கம் மற்றும் வெள்ளி அதன் மதிப்பை தக்க வைத்துக் கொள்ளும். பாரம்பரியமாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கம் எப்போதும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை இருக்கும்போது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பை தரும் என்பது உண்மை என்றாலும் நீண்டகால முதலீட்டில் லாபத்தை கொடுக்காது என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

தங்கம் வட்டி கொடுக்காது

வீட்டில் வைத்திருக்கும் தங்கம் எப்போதும் எந்தவொரு டிவிடெண்ட் அல்லது வட்டியைத் தராது என்றும் அதன் மதிப்பு மட்டுமே உயரும் என கூறும் நிபுணர்கள், விலை உயரும்போது மட்டுமே தங்கம் லாபம் கொடுக்கும் எனவும் இதில் இருந்து free flow எனப்படும் வரவு எதுவும் இருக்காது என்றும் அறிவுறுத்துகின்றனர். குறுகிய காலத்தில் தங்கத்தின் விலைகள் கணிக்க முடியாதவை என அடித்துக்கூறும் பொருளாதார நிபுணர்கள், நீண்ட கால முதலீடாகப் பார்க்கும்போது தங்கம் பெரும்பாலும் பங்குச்சந்தை வருமானத்தை விடக் குறைவாகவே கொடுக்கும் தெரிவிக்கின்றனர்.

 

அள்ளிக்கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு

பங்குச்சந்தை நேர்மறையாக இருக்கும்போது,மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு தங்கத்தை விட அதிக லாபத்தை தரும். நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபத்தை அளிக்கும் சூழலே நிலவுகிறது. பணவீக்கத்தைத் தாண்டி அவை அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.மியூச்சுவல் ஃபண்டுகள், குறிப்பாக ஈக்விட்டி சார்ந்து இருக்கும் ஃபண்டுகளை வல்லுநர்கள் தான் நிர்வகிப்பார்கள். இதன் மூலம் உங்கள் போர்ட்ஃபோலியோ பன்முகப்படுத்தப்படும். எனவே, அதன்படி பார்த்தால் நீண்ட கால நோக்கில் அது நல்ல லாபத்தைக் கொடுக்கும். இதனால் செல்வத்தை உருவாக்குவதில் தங்கத்தை விட இது சிறப்பாகச் செயல்படுகின்றன. மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் குறிப்பிட்ட தொகை என சிப் முறையில் நாம் முதலீடு செய்தால் நீண்ட கால நோக்கில் தங்கத்தை விடவே நல்ல லாபம் பார்க்கலாம் இப்போது தங்கம் விலை உயர்ந்தாலும் கூட, நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது தங்கம் லாபத்தைக் கொடுத்தாலும் அதையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு ஈக்விட்டி லாபம் இருக்கும்.

ஈக்விட்டி முதலீட்டைப் பொறுத்தவரை, லார்ஜ்கேப் பங்குகளின் மதிப்பு நியாயமானதாக இருக்கிறது. ஆனால், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. மதிப்பு அதிகமாக இருந்தாலும் கூட, மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனங்களின் வருமான வளர்ச்சி லார்ஜ்கேப் நிறுவனங்களை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குச்சந்தையில் துறை சுழற்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஈக்விட்டி முதலீட்டாளர்கள் அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு லார்ஜ்கேப் மற்றும் மல்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் ஆறு முதல் 12 மாதங்கள் வரை பரவலாக்கி படிப்படியாக முதலீடு செய்ய வேண்டும். இந்தியப் பொருளாதார வளர்ச்சி, மூலதன செலவுகள், வட்டிக் குறைப்பு எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் ஈக்விட்டி தற்போது பாசிட்டிவாகவே இருக்கிறது.

ஈக்விட்டியில் சொத்து ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்கலாம்

ஈக்விட்டியில் சொத்து ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்கலாம். ஒரு வேளை பங்குச்சந்தை இறங்கினால் வேகவேகமாக முதலீட்டை அதிகரிக்கலாம் என மோதிலால் ஆஸ்வால் பரிந்துரைத்துள்ளது. வங்கி வைப்பு நிதி, கடன் பத்திரங்கள், ரெய்ட், இன்விட், என்.சி.டி போன்ற கடன் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள், கடன் போர்ட்ஃபோலியோவில் 30 சதவிகிதத்தை ஆக்டிவ் ஃபண்டுகள், நீண்டகால அரசு கடன் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். மல்டி அஸெட் ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளுக்கு 30% முதல் 35% ஒதுக்கீடு வழங்கலாம். பிரைவேட் கிரெடிட், ரெய்ட், இன்விட், அதிக வட்டி தரும் என்.சி.டி பத்திரங்கள் ஆகியவற்றுக்கு 30% முதல் 35% ஒதுக்கீடு வழங்கலாம். குறுகிய கால பணத் தேவைகளுக்கு ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்டுகள் மற்றும் ஆர்பிட்ராஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.