சீத்தாபழ சாகுபடி - கட்டாந்தரையிலும் அள்ளிக்கொடுக்கும் மகசூல்!
சீதாப்பழம் அதன் தனித்துவமான சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுகிறது. தமிழகத்தில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சீதாப்பழ சாகுபடி விவசாயிகளுக்கு லாபகரமான தொழிலாக உள்ளது. சீத்தா மரத்தின் இலைகள் இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகின்றன

அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த அதிசய பழம்
பச்சை வண்ணத்தில் இதய வடிவில் இருக்கும் சீதாபழத்தின் மேற்புறம் ஆமை ஓடுகளைபோல் கரடுமுரடாய் இருந்தாலும் உள்ளே இருக்கும் வெள்ளை சுளைகளின் சுவை நம்மை மெய் மறக்கச்செய்யும். அனோனா ரெடிகுலேட்டா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட சீத்தா பழத்தை 'கஸ்டர்டு ஆப்பிள்' என்று ஆங்கிலத்தில் அழைப்பர். அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த தாவரம் தற்போது இந்தியாவில் ஊடு பயிராகவும் முதன்மை பயிராகவும் பயிர் செய்யப்படுகிறது.
வருமானத்தை அள்ளித்தரும் அட்சயபாத்திரம்
தமிழக கிராமங்களில் விவசாய நிலங்களை ஒட்டியிருக்கும் சிறுகாடுகள் மற்றும் கட்டாந்தரைகளில் தனித்தனியாக பயிர் செய்யப்படும் சீதா மரங்கள் செலவுக்கு மீறிய வருமானத்தை விவசாயிகளுக்கு கொடுக்கிறது.சேலத்தில் எப்படி மாம்பழம் அதிகமாக விளைகிறதோ அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சீத்தாபழம் அதிகமாக விளைகிறது.அங்கு விளைவிக்கப்படும் சீத்தா பழங்கள் மும்பை, கர்நாடகா, கேரளவிற்கு அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.
பூ பூக்கும் மாசம் "ஆடி"
ஆடியில் பூ பூக்கும் சீத்தா, பிஞ்சாகி காயாகி ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பழுத்து பலன் தர தொடங்கிவிடும். கட்டாந்தரைகளிலும் புறம்போக்கு இடங்களிலும் விளையும் சீத்தாவை வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச்செல்கிறார்கள்.விவசாயிகள் பழுக்கும் வந்த காய்களைப் பறித்து, தர வாரியாகப் பிரித்து, பெட்டிகளில் அடுக்கி விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். உரம், மருந்து உள்ளிட்ட எதுவும் சீதாவுக்கு தேவையில்லை என்பதால் மரத்தில் பழுக்கும் ஒவ்வொரு பழமும் விவசாயிகளுக்கு லாபம்தான்.
இயற்கையாக விளையும் "இதயகனி"
உரமோ, பூச்சி மருந்தோ இல்லாம விளையக்கூடிய பழம் இது என்பதால் இதை சாப்பிடுற யாருக்கும் எந்தக் கெடுதியும் வர்றதில்லை கூறும் விவசாயிகள்,கூழ் மாதிரி மிருதுவான சதை இருக்குறதால பல் இல்லாத வயசானவங்க கூட சீத்தா பழத்தை விரும்பிச் சாப்பிடுறாங்க என்பதில் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என தெரிவிக்கின்றனர்.
சீசனை பொறுத்து மாறும் விலை
ஒரு கிலோ பழத்துக்கு சீசனைப் பொறுத்து ஒரு ரூபாயிலிருந்து அதிகபட்சம் பதினைஞ்சு ரூபாய் வரைக்கும் விலை கிடைக்கும் எனவும் காய்களை செடியில இருந்து பறிச்சு அதிகபட்சம் நாலு நாட்களுக்குள் விற்பனை செய்யலனா கறுத்து வீணாகிடும் என்று கூறும் விவசாயிகள், இதைத் தோட்டப் பயிரா நட்டாலும், நல்லா விளையும் என தெரிவிக்கின்றனர்.
புதிய ரகங்களும் கிடைக்கும்
இயற்கையாக கிடைக்கும் சீத்தா ரகத்துல விதைப் பகுதி அதிகமாகவும் சதைப் பகுதி குறைவாகவும் இருக்கும். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 'ஏ.சி.கே-1' என்ற சீத்தா ரகத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ரக பழங்கள் சிறிய விதைகளையும் நிறைய சதைப் பற்றான பகுதிகளையும் கொண்டிருக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் இருக்கும் பண்ணையில்கூட தாய்ச்செடி மூலம் இந்த ரக சீத்தா கன்றுகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு கொடுக்கப்படுகின்றன. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய ரகம் என்பதால் மிக குறைந்த அளவு நீர்ப்பாசனம் இருக்கும் பகுதியிலும் இதை நட்டு வருமானம் பார்க்கலாம். ஆனால், சீத்தா பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் தாக்குப் பிடிக்காது என்பதுதான் பெரிய குறை.
வேலிபயிராக வைத்து மகசூல் அல்லலாம்
ஆங்காங்கே குளிர்பதனக் கிடங்குகள் இருந்தால், சீத்தா காய்களை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம். சீத்தா மரத்தை வேலிப்பயிராக வைக்கலாம் என சொல்லும் விவசாய வல்லுணர்கள், கிளுவை மாதிரியான வேலிகள் அமைக்கும்போது, கிளுவைக்கு இடையில் அங்கங்கே சீத்தா விதைகளைப் போட்டு வைத்தால் தானாக முளைத்து விடும் என்கின்றனர். சீத்தா மர இலைகள் இயற்கை விவசாயத்தில் பூச்சிவிரட்டியாக பயன்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.