10 ரூபாய் நாணயம் செல்லுமா? மத்திய அரசின் பதில் என்ன?
10 ரூபாய் நாணயத்தை பல மாநிலங்களில் ஏற்க மறுப்பதற்கான காரணம் குறித்தும், அது செல்லத்தக்கதா என்பது குறித்தும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கி சார்பில் 10 ரூபாய் நாணயம் பல்வேறு வடிவங்களில், அளவுகளில், கருத்துக்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சில மாநிலங்களில் புழக்கத்தில் ஏற்கப்பட்டாலும், வடமாநிலங்கள் உள்ளிட்ட சில மாநிலங்களில் மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் ஏன் என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய நிதித்துறைஇணை அமைச்சர் பங்கஜ் சவுத்திரி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறுகையில் “ 10 ரூபாய் நாணயத்தை பல்வேறு வடிவங்களில், அளவுகளில் ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இந்த நாணயம் நாடுமுழுவதும் அனைத்து இடங்களிலும் ஏற்கத்தக்கது, செல்லத்தக்கது.
இதற்குமுன் பல்வேறு மாநிலங்களில் இந்த நாணயம் ஏற்கப்படாமல் இருந்ததற்கு போலியான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தது காரணமாக இருக்கலாம். ஆனால், 10 ரூபாய் நாணயத்தை ஏற்க மக்கள் மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆதலால், 10 ரூபாய் நாணயம் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும்வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை செய்யப்படும். 10ரூபாய் நாணயம் குறித்து மக்கள் வைத்துள்ள தவறான கண்ணோட்டத்தை நீக்க முயற்சி எடுக்கப்படும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட இடைவெளியில் விழிப்புணர்வு செய்ய உத்தரவிடப்படும். ஆதலால் மக்கள் எந்தவிதமான தயக்கமின்றி 10 ரூபாய் நாணயத்தை ஏற்றுக்கொள்ளலாம்.
தேசிய அளவில் குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு, நாளேடுகளில் விழிப்புணர்வு விளம்பரம், விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி மூலம் செய்யப்படும். ரூ10 நாணயத்தை ஏற்க மறுத்த கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள், மக்கள் மீது இதுவரை குறிப்பிட்ட வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை
இவ்வாறு அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்