Indian Railways: நாடு முழுவதும் 15 முக்கிய ரயில் நிலையங்களை தனியார் பங்களிப்புடன் (PPP) உலகத் தரத்தில் மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் சென்னை சென்ட்ரல், கோவை, ஆவடி, தாம்பரம் ஆகிய நான்கு நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்கி, பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், 15 ரயில் நிலையங்களை அரசு-தனியார் பங்களிப்பு (PPP) மாதிரியின் கீழ் மறுசீரமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் நான்கு முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், கோவை சந்திப்பு, ஆவடி மற்றும் தாம்பரம் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் குறித்த தகவலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உறுதிப்படுத்தினார். ஏற்கெனவே, மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையம் இதே பி.பி.பி மாதிரியின் கீழ் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் நிலையங்கள்

இந்த மறுசீரமைப்புத் திட்டத்திற்காக அடையாளம் காணப்பட்ட 15 நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அரசு-தனியார் பங்களிப்பு மதிப்பீட்டுக் குழு (PPPAC) ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதற்கான டெண்டருக்கு யாரும் முன்வராததால், மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மீதமுள்ள 14 நிலையங்களுக்கான பெருந்திட்டம் மற்றும் நிதி மாதிரிகளை உருவாக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த பட்டியலில் சென்னை, மும்பை மற்றும் டெல்லி-என்.சி.ஆர் பகுதிகளில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியல்:

* சென்னை சென்ட்ரல், கோவை சந்திப்பு, ஆவடி, தாம்பரம் (தமிழ்நாடு)
* அந்தேரி, தாதர், கல்யாண், புனே (மகாராஷ்டிரா)
* ஆனந்த் விகார், டெல்லி சந்திப்பு, ஹஸ்ரத் நிஜாமுதீன் (டெல்லி)
* விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்)
* கிராந்திவீர சங்கொள்ளி ராயண்ணா பெங்களூரு (கர்நாடகா)
* போபால் (மத்தியப் பிரதேசம்)
* வதோதரா (குஜராத்)

'அம்ரித் பாரத்' - மற்றொரு முக்கியத் திட்டம்

இது ஒருபுறமிருக்க, 'அம்ரித் பாரத்' என்ற மற்றொரு திட்டத்தின் கீழும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 1,340 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. இவற்றில் இதுவரை 261 நிலையங்களின் மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, பொள்ளாச்சி சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, மன்னார்குடி, நாமக்கல், குன்னூர், ஊட்டி, பரமக்குடி, விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளிட்ட பல நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு வெவ்வேறு திட்டங்கள் மூலம் இந்திய ரயில்வேயின் முகத்தை மாற்றியமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.