india post ippb bank :இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி(ஐபிபிபி) வளர்ச்சிக்காக ரூ.820 கோடி நிதியுதவி கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி(ippb bank ஐபிபிபி) வளர்ச்சிக்காக ரூ.820 கோடி நிதியுதவி கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கி விரிவாக்கம்

 நாட்டில் அனைத்து தபால்நிலையங்களிலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி தொடங்கவும் இந்த நிதியுதவி பயன்படுத்தப்படும்.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி நிதியுதவி வழங்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் 1.56 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. 1.30 லட்சம் அஞ்சல் நிலையங்களில் பேமெண்ட் வங்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த நிதியுதவி மூலம் பேமெண்ட் வங்கி தனது கிளைகளைப் பரப்பவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், தேவையான அம்சங்களை புதுப்பிக்கவும் முடியும். ஒட்டுமொத்தமாக ரூ.820 கோடி நிதியுதவி வழங்கப்பட்டால், பேமெண்ட் வங்கி ஒரு லட்சத்து 56ஆயிரத்து 434 தபால்நிலையங்களில் செயல்படும்.

கிராமப்புற மக்களுக்காக

கிராமங்களில் வாழும் ஏழைப் பெண்கள், தாய்மார்கள், சகோதரிகளுக்கு எளிதாகவங்கி வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பேமெண்ட் வங்கி வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கிக்கான நிதியுதவி ரூ.1,435 கோடியிலிருந்து, ரூ.2,255 கோடியாக அதிகரி்த்துள்ளது. 

இந்த திட்டத்தின் நோக்கமே பேமெண்ட் வங்கி வசதி எளிதாக கிடைக்கவேண்டும், வசதியாக இருக்க வேண்டும், சாமானியர்களுக்கு நம்பிக்கைக்குரியதாக இருக்க வேண்டும். நிதியுதவி வழங்குவதன் மூலம் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவை எல்லாம் நீக்கப்படும். மக்களுக்கு எளிதாக வீட்டுவாசலில் பேமெண்ட் வங்கிச் சேவை கிடைக்கும். இதன்மூலம் குறைவான பணத்தைக் கையாண்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவோம் என்றமத்திய அரசின்இலக்கு நிறைவேற்றப்படும்.

1.61 லட்சம் கோடி மதிப்பு

1.36 லட்சம் தபால்நிலையங்களில் தற்போது இந்தியாபோஸ்ட் பேமெண்ட் வங்கி செயல்பட்டு வருகிறது. இதற்காக 1.89 லட்சம் தபால்அலுவர்கள், கிராம தக் சேவர்கள், ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் வசதியுடன் உள்ளனர். இவர்கள் மூலம் வீட்டுக்கே வங்கிவசதி கிடைக்கும்.

கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேமெண்ட் வங்கி இன்று தனிப்பட்ட 650 கிளைகளுடன் செயல்படுகிறது. இதுவரை 5.25 கோடி வங்கிக்கணக்குகள் உள்ளன, 82 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இந்தபரிமாற்றங்கள் மதிப்பு ரூ.1.61 லட்சம் கோடியாகும். 765 லட்சம் ஆதார் அடிப்படையிலான பரிமாற்றங்கள் மூலம் ரூ.21 ஆயிரத்து 343 கோடி பரிமாற்றப்பட்டுள்ளது.

பெண்கள் கணக்கு அதிகம்

5 கோடி கணக்குகளில் 77 சதவீதம் கிராமங்களில் தொடங்கப்பட்டவை, அதில் 48சதவீதம் பெண் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்சம் 1000 டெபாசிட் தொகை இருக்கிறது. 40 லட்சம் பெண் வாடிக்கையாளர்கள் டிபிடி மூலம் நேரடியாக அரசின் மானியங்களைப் பெற்று வருகிறார்கள். இதுவரை ரூ.2,500 கோடி மானியம் நேரடி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்காக 7.80 லட்சம் வங்கிக்கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளன

இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்