முதல் முறையாக அமீரக கச்சா எண்ணெய்க்கு ரூபாயில் பேமெண்ட் செய்த இந்தியா!
அமீரக எண்ணெய் நிறுவனமான ADNOC உடன் இந்தியன் ஆயில் நிறுவனம் (IOCL) செய்த ஒப்பந்தத்தின்படி முதல் முறையாக கச்சா எண்ணெய்க்கான விலையை இந்தியா ரூபாயாகச் செலுத்தியிருக்கிறது.
அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆகியவற்றுக்கு இடையே உள்நாட்டு கரன்சி செட்டில்மென்ட் (LCS) என்ற உடன்படிக்கைக்குப் பின்பு, இரு நாடுகளுக்கும் இடையே முதல் முறையாக ரூபாய் மதிப்பில் எண்ணெய் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு மில்லியன் பீப்பாய்களில் கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ரூபாயில் பணம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தங்க ஏற்றுமதியாளர் இந்தியாவுக்கு 25 கிலோ தங்கத்தை சுமார் 128.4 மில்லியன் ரூபாய்க்கு (1.54 மில்லியன் அமெரிக்க டாலர்) விற்பனை செய்ததை அடுத்து இந்த கச்சா எண்ணெய் பரிவர்த்தனை நடந்திருக்கிறது.
கடன் நெருக்கடியில் இருந்து சீக்கிரம் விடுபட செய்ய வேண்டும்? வல்லுநர்கள் சொல்லும் எளிய வழிமுறைகள்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய ரூபாய் மற்றும் அமீரக திர்ஹாம்கள் இரண்டும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்டன. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் வலுவான எண்ணெய் மற்றும் எரிவாயு உறவைக் கொண்டுள்ளன. மேலும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கான முக்கிய பங்காளியாக உள்ளது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது பெரிய நாடாக உள்ளது. எரிவாயு ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளது. இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் கடந்த ஆண்டு 35.10 பில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்களை வர்த்தகம் செய்துள்ளன. இது மொத்த இருதரப்பு வர்த்தகத்தில் 41.4 சதவீதமாகும்.
ஜூலை 15, 2023 அன்று பிரதமர் மோடி முன்னிலையில் இருநாட்டு வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது நினைவூட்டத்தக்கது.