ஹோண்டா நிறுவனத்தின் CB500X மோட்டார்சைக்கிள் விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது மிடில்வெயிட் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் CB500X விலையை சத்தமின்றி குறைத்து இருக்கிறது. தற்போது இந்த மாடலின் விலை ரூ. 1.08 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 5.79 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஹோண்டா CB500X மாடல் ரூ. 6.87 லட்சம் துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஹோண்டா தனது 500சிசி மாடல்களை ஐரோப்பிய சந்தையில் அப்டேட் செய்தது. ஐரோப்பாவில் அப்டேட் செய்யப்பட்ட CB500X மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதை ஒட்டி புது மாடல் வெளியீட்டுக்கு முன் மீதமுள்ள யூனிட்களை விற்று முடிக்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ஹோண்டா CB500X மாடல் CKD யூனிட்களாக இறக்குமதி செய்யப்படுகின்றன. பின் இங்குள்ள ஆலையில் அசெம்பில் செய்யப்படுகிறது. இதன் விற்பனை ஹோண்டாவின் பிரீமியம் ஹோண்டாபிக் விங் மூலம் நடைபெறுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் கிராண்ட் ப்ரிக்ஸ் ரெட் மற்றும் மேட் கன்பவுடர் பிளாக் மெட்டாலிக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. 

இந்த மாடலில் 471சிசி பேரலெல் டுவின் சிலிண்டர், 8 வால்வுகள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 பி.ஹெச்.பி. திறன், 43.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது. 

இந்த மாடல் செமி-ஃபேரிங் டிசைன், உயரமான விண்ட்ஸ்கிரீன், எல்இடி லைட்டிங், நெகடிவ் எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அலாய் வீல்கள் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. இத்துடன் டூயல்-சேனல் ஏபிஎஸ், எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் மற்றும் ஹோண்டா இக்னிஷன் செக்யூரிட்டி சிஸ்டம் வழங்கப்படுகிறது.