இல்லத்தரசிகளுக்கு சமையல் செலவு அதிகரிப்பு.. எண்ணெய் விலை திடீர் உயர்வு.. எவ்வளவு?
சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்தியாவில் சூரியகாந்தி, சோயாபீன், பாமாயில் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

சமையல் எண்ணெய் விலை உயர்வு
சமீப காலமாக இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் தொடர்ந்து பேசப்படும் நிலையில், தற்போது சமையல் எண்ணெய்களின் விலையும் உயர்ந்தது வருகிறது. குறிப்பாக சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய் மற்றும் பாமாயில் போன்ற எண்ணெய்களின் விலை கடந்த சில நாட்களில் ஒரு லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை வரை உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக சர்வதேச அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
உலக சந்தைகளில் தாக்கம்
அமெரிக்கா–ஈரான் மற்றும் இஸ்ரேல்–ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது, கடல் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு குறைந்ததால் இறக்குமதி செலவுகளும் உயர்ந்துள்ளன. இந்த காரணங்களால் வெளிநாடுகளில் இருந்து வரும் சமையல் எண்ணெய்களின் விலை இந்திய சந்தையிலும் உயர்ந்து வருகிறது.
சமையல் எண்ணெய்களின் பயன்பாடு
இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும், உள்நாட்டு உற்பத்தி தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. உதாரணமாக சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் முன்னிலையில் இருந்தாலும், நாட்டின் மொத்த தேவைக்கு அது போதுமானதாக இல்லை. இதனால் இந்தியா உக்ரைன், ரஷ்யா, அர்ஜென்டினா மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளில் இருந்து பெருமளவில் எண்ணெய்களை இறக்குமதி செய்து வருகிறது.
எண்ணெய் விலை உயர்வு
ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த நாடுகளிலிருந்து வரும் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச கடல் போக்குவரத்து பாதைகளில் ஏற்பட்டுள்ள அபாயங்கள் காரணமாக சரக்கு கட்டணங்களும் அதிகரித்துள்ளன. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணெய்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
சூரியகாந்தி எண்ணெய்
இந்த விலையேற்றத்தின் தாக்கம் சந்தையில் ஏற்கனவே தெரிந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டர் ரூ.161க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது அது ரூ.165 வரை உயர்ந்துள்ளது. இது ஒரு குறிப்பிட்ட பிராண்டுக்கு மட்டுமல்ல சந்தையில் உள்ள அனைத்து எண்ணெய் வகைகளுக்கும் உள்ளது. சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, உலகளாவிய நிலைமை விரைவில் சீராகவில்லை என்றால் ஒரு லிட்டருக்கு மேலும் ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர வாய்ப்பு உள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

