சர்வதேச பொருளாதார காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திடீரென உயர்ந்த தங்கம் : திருமண ஏற்பாட்டாளர்கள் கலக்கம்
சர்வதேச பொருளாதார காரணங்களால் ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியில் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. இந்தியாவில் புதன் கிழமை செண்டிமென்ட் வாடிக்கையாளர்களை நகைக்கடை பக்கம் அழைத்து சென்றதால் தேவை அதிகரித்து ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்றத்தை ஏற்படுத்தியது.
ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,250க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வீழ்ச்சி காணப்பட்ட நிலையில், இன்று தங்கம் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஏப்ரல் 22 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 15-ந் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை கடந்த 2 நாட்களாக சரிவுடன் காணப்பட்டது.
தொடக்கத்தில் சரிவு, தற்போது உச்சம்
இந்நிலையில், வார தொடக்க நாளான திங்கள் கிழமையும் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய் கிழமையும் தங்கம் நடுத்தர மக்களுக்கு சாதகமாகவும், திருமண ஏற்பாடுகள் செய்து வருவோருக்கு பக்கபலமாகவும் இருக்கும் வகையில் குறைந்து இருந்தது.நேற்றைய தினம் ஆபரணத்தங்கம் விலை 1 கிராம் 9 ஆயிரத்து 200 ரூபாயாக இருந்தது. இது முந்தைய நாள் விற்பனையை விட 105 ரூபாய் சரிவாகும். அதேபோல் 18 கேரட் தங்கம் கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 75 ரூபாயாக இருந்து. 1 கிராம் வெள்ளி மாற்றம் இன்றி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய ரேட் இதுதான்!
இந்நிலையில், இன்று (ஜூன் 18) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ரூ.9,250க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நாள்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலை, இன்றும் கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 122 ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,22,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் தங்கம் விலையில் இதே நிலையே காணப்பட்டது. விலை உயர்வு காரணமாக நகைக்கடைகளில் பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை.
தங்கம் சென்டிமென்டும் சர்வதேச நிலவரமும்
இந்தியாவையும் தங்கத்தின் சென்டிமென்டையும் பிரிக்கவே முடியாது என கூறும் சந்தை நிபுணர்கள், தங்கத்தின் விலை உயர்வை பொதுமக்கள் பெரிதுபடுத்த தேவையில்லை எனவும் காத்திருந்து வாங்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். முதலீட்டுக்காக அல்லாமல் திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்கு நகைகளை வாங்குவோரும் வரா இறுதிவரை காத்திருக்கலாம் எனவும் தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜுலாணி தெரிவித்துள்ளார்.வரும் நாட்களில் சிறிய ஏற்ற இறக்கங்களே இருக்கும் கூறும் சந்தை நிபுணர்கள், சீட்டு காட்டுவோர் மட்டும் விலை குறையும் நாட்களை மட்டும் பயன்படுத்திகொள்ள வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் தலையீடு சர்வதேச சந்தைகளில் நிலையான தன்மையை ஏற்படுத்தாததால் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறிய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் உலோகங்களில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
