தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொப்பரை தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட மாநிலங்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தேவை அதிகரித்துள்ளது. 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை தேங்காய்கள் நேரடியாக தேங்காய் எண்ணெய் ஆட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. உள்நாட்டு தேவை போக எஞ்சிய கொப்பரை தேங்காய்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கோவை திருப்பூர் ஈரோடு பொள்ளாச்சி ஆகிய இடங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

கொப்பரை தேங்காய் விலை ரூ.20,000

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் சொசைட்டிகளில் கொப்பரை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட மாநிலங்களில் தேங்காயின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், கொப்பரை தேங்காய் எண்ணெய் உற்பத்தி, மருத்துவ பயன்பாட்டுக்கு தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம் தேங்காயை கொப்பரையாக உலர வைத்து தகுந்த பதத்துடன் விற்பனை செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் காரணமாக விவசாயிகள் கொப்பரை உற்பத்தியை விட நேரடி தேங்காயாக விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கொப்பரை உற்பத்தி அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. இதுவே விலை உயர காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு குவிண்டால் கொப்பரை தேங்காய் விலை 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கர்நாடக சந்தையில் உச்சம்

அதேபோல் கர்நாடக மாநிலம் திப்பூர் சந்தைக்கு தினமும் விவசாயிகள் கொண்டுவரும் கொப்பரைகள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் திப்தூர் ஏபிஎம்சி கொப்பரை சந்தையில் உலர் கொப்பரையின் விலை குவிண்டாலுக்கு ரூ .20,900த்தை எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்ச விலை என்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பாண்டில் கொப்பரையின் ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ .12,100 உயர்த்தியது மத்திய அரசு. இதன் மூலம், கொப்பரையின் விலை இதுவரை சந்தையில் வரலாறு படைத்துள்ளது. கொப்பரை வர்த்தக வரலாற்றில் கொப்பரை விலை குவிண்டாலுக்கு ரூ.20 ஆயிரத்தை தாண்டியதே இல்லை என்றும் சில மாதங்களுக்கு முன் ஒரு குவிண்டால் கொப்பரை 8 ஆயிரம் ரூபாய் என்ற நிலையில் இருந்ததாகவும் விவசாயிகள் கூறுயுள்ளனர்.

விலை உயர்வுக்கு இதுவே காரணம்

விவசாயிகள் பிற லாபகரமான பயிர்களுக்கு திரும்புதல், தென்னை பயிரை பாதிக்கும் நோய்கள் போன்றவற்றால் திப்தூர் சந்தைக்கு வரும் கொப்பரையின் தேவை சமீபத்திய மாதங்களில் குறைந்துள்ளதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் தென்னை விளையும் பிற பகுதிகளில் தேங்காய் விளைச்சலும் குறைந்துள்ளது. சமீப காலமாக நமது மாநிலத்தில் இளநீர் மற்றும் தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அதிக அளவில் விவசாயிகள் லாபம் அதிகரித்துள்ளது.