கொப்பரைத் தேங்காய் தயாரிப்பது எப்படி? அவற்றிற்கான சந்தை வாய்ப்பு எப்படி இருக்கிறது?
கொப்பரைத் தேங்காய் தயாரிப்பது எப்படி?
தமிழகத்தில் 75 சதவீத தென்னை மரங்கள் நாட்டு வகையை சேர்ந்தவை. இவை கொப்பரை உற்பத்திக்கு ஏற்றவை. குலை தள்ளிய காய்களை பறித்து, 55 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்து, பின்னர் மட்டையை உரித்து தேங்காய் எடுக்க வேண்டும்.
அதை இரண்டாக உடைத்து வெயிலில் 2 நாள் காய வைக்க வேண்டும். பின்னர் ஓட்டில் இருந்து பருப்பு தனியாக வெளியேறும் வகையில் வளைந்து கொடுக்கும். அதை கத்தியால் நெம்பினால் பருப்பு மட்டும் தனியாக வந்துவிடும்.
அவற்றை நல்ல வெயிலில் 3 நாளும், இளம் வெயிலில் 5 நாளும் காய வைத்தால் தேங்காய் பருப்பில் ஈரப்பதம் 10 சதவீதமாக குறையும். காயவைத்த தேங்காய் பருப்பை கையில் வைத்து அழுத்தி பார்க்க வேண்டும்.
அப்போது அது உடைந்தால் தேவையான அளவுக்கு காயவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். கொப்பரை உடையாமல் வளைந்து கொடுத்தால் போதுமான அளவு காய்ந்து விற்பனைக்கு தகுதியாகி விட்டது என்பதை அறியலாம்.
சந்தை வாய்ப்பு!
கேரளாவில் தேங்காய் எண்ணெய்தான் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகளவில் உள்ளதால் இத்தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது.
கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள் கொப்பரை வாங்க காத்திருப்பதால் எப்போதும் கொப்பரைக்கு கிராக்கி உள்ளது. அவர்களே வந்து வாங்கி செல்வார்கள்.
தேங்காய் மட்டைகள் மூலம் நார் உற்பத்தி செய்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பவர்கள், மட்டைகள் வாங்க முன்பதிவு செய்கிறார்கள். தேங்காய் ஓடுகளை பாய்லரில் எரிக்கவும், கொசுவர்த்தி தயாரிக்கவும், கரியாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களும் உள்ளனர். இவர்களும் நேரடியாக வந்து வாங்குகிறார்கள்.