நாட்டின் நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டு முடிவில் இதுவரை வரலாற்றில் இல்லாதவகையில் இலக்கைக் கடந்து ரூ.12.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டு முடிவில் இதுவரை வரலாற்றில் இல்லாதவகையில் இலக்கைக் கடந்து ரூ.12.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வரலாற்றிலேயே நேரடி வரிவசூல் இதுவரை ரூ.11.18 லட்சம் கோடியைக் கடந்ததில்லை. ஆனால் இந்த முறை ரூ.12.50 லட்சம் கோடியைக் கடக்கும் என நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நேரடி வரி என்றால் என்ன?

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி (Corporate Income Tax), தனிநபர் வருமான வரி (Personal Income Tax), சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இதில், நேரடி வரிகளை மற்றவர்கள் மீது மாற்றவோ சுமத்தவோ முடியாது. உதராணமாக, ஒருவரின் வருமானம் அதிகமாகும்போது அவர் அதிகமான நேர்முக வரிகளையும், வருமானம் குறைவாக உள்ளவர்கள் குறைவான வரிகளையும் செலுத்துவார்கள். அதாவது, நேரடி வரிகள் ஒருவரின் செலுத்தும் திறனுக்கேற்றவாறு மாறுபடும்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ஜே.பி.மொகபத்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 

நடப்பு நிதியாண்டில் அரசின் நேரடி வரிகள் வசூல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதாவது ரூ.12.50 லட்சம் கோடியை வசூல் கடக்கும். இந்திய வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த வரிவசூல் என சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு முன் நேரடி வரி வசூலில் ரூ.11.18 லட்சம் கோடி என்பதே ஆண்டின் அதிகபட்ச வரிவசூலாக இருந்தது.அது இந்த நிதியாண்டியில் முறியடிக்கப்படும்.

நடப்பு நிதியாண்டில் ரூ.11.08 லட்சம் கோடி நேரடி வரி வசூல் வசூலிக்க மத்திய அரசு இலக்கு வைத்திருந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் வரை ரூ.10.38 லட்சம் கோடியை எட்டிவிட்டோம். இன்னும் இந்த ஆண்டு இலக்கை எட்டுவதற்கு ரூ.70ஆயிரம் கோடிதான் தேவை. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் இருப்பதால் இலக்கைவிட அதிகரிக்கும்.

நாங்கள் திருத்தப்பட்ட இலக்காக ரூ.12.50 லட்சம் கோடியாக நிர்ணயித்தோம். இந்த இலக்கைவிட வரி வசூல் அதிகரி்க்கும் என நம்புகிறோம். இதில் ரூ.6.35 லட்சம் கோடிவரை கார்ப்பரேட் வரியாக அரசுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது, ரூ.6.15 லட்சம் கோடி தனிநபர் வருமானவரியாகக் கிடைக்கலாம். 

கடந்த சில ஆண்டுகள் நேரடி வரிவசூலை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரி செலுத்துவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, தேவையான அவகாசம் அளிக்கப்படுகிறது, புள்ளிவிவரங்கள் தெளிவாகச் சேகரிக்கப்படுகின்றன. இவற்றால்தான் வரிவசூல் அதிகரித்துள்ளது.

கட்நத 2018-19ம் ஆண்டில் நேரடி வரிகள் வசூல் ரூ.11.18 லட்சம் கோடி, 2019-20ம் ஆண்டில் ரூ.10.28 லட்சம் கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.9.24 லட்சம் கோடியாகத்தான் இருந்தது.

நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை ரூ.11.98 லட்சம் கோடி வசூலாகியுள்ளது, நிகர வசூலாக ரூ.10.38 லட்சம் கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு இதேமாதத்தோடு ஒப்பிடுகையில் 42 சதவீதம் அதிகமாகும், கடந்த 2019-20ம் ஆண்டு ஒப்பிடுகையில் 32 சதவீதமும், 2018-29ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 31 சதவீதமும் அதிகமாகும். 

நிகர வசூல் அடிப்படையில் பார்த்தால் நடப்பு நிதியாண்டில் ரூ.10.38 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது கடந்த 2020-21ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 56.90 சதவீதம் அதிகம், 2019-20ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 41 சதவீதமும், 2018-19ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 33.8 சதவீதமும் அதிகமாகும்.

இவ்வாறு மொகப்பத்ரா தெரிவித்தார்