விவசாயிகள் ரூ.5 லட்சம் வரை வங்கிகளில் ஈஸியாக கடன் வாங்கலாம்; மத்திய அரசு அளிக்கும் 'மெகா' பரிசு!
விவசாயிகளுக்கான கடன் உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட்
2025–26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு தாக்கல் செய்யபபடும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் எட்டாவது மத்திய பட்ஜெட் ஆகும்.
மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. முந்தைய பட்ஜெட்களை போலவே இந்த பட்ஜெட்டிலும் விவசாயத் துறைக்கு பயனளிக்கும் நோக்கில் பல குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கிசான் கிரெடிட் கார்டு வரம்புகளை உயர்த்துதல், விவசாய பொருட்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தல் மற்றும் விவசாய ஒதுக்கீடுகளை அதிகரித்தல் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என தகவல் வெளியாகி இருக்கின்றன.
கிசான் கிரெடிட் கார்டு
கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான (KCC) வரம்பை மத்திய அரசு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தலாம். இந்த நடவடிக்கை விவசாயிகளின் வருமான திறனை கணிசமாக அதிகரிக்கும். இதன் மூலம் அவர்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளில் அதிக முதலீடு செய்ய முடியும். விவசாயிகள், கால்நடை, மீன் வளர்ப்பு போன்ற தொழில்களை செய்து வருபவர்கள் கிசான் கிரெடிட் கார்டு மூலம் வங்கிகளில் குறைந்த வட்டியில் எளிதில் கடன் பெறலாம். இந்த கடன் வரம்பு இப்போது ரூ.3 லட்சமாக இருக்கும் நிலையில் இது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என பட்ஜெட்டின்போது அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
விதைகள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய உள்ளீடுகள் மீதான பொருட்களுக்கு ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது விதைகள் மற்றும் உரங்களுக்கு மாறுபட்ட அதிக ஜிஎஸ்டி இருப்பதால் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இவற்றை குறைப்பதன் மூலம் விவசாயிகளின் லாபத்தை அதிகரிக்க முடியும். இது குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது.
விவசாயத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்தல்
முந்தைய பட்ஜெட்டில் விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ.65,529 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. விவசாயத் துறையை மேம்படுத்துவதிலும் விவசாயிகளை ஆதரிப்பதிலும் அதன் தொடர்ச்சியான கவனம் பிரதிபலிக்கும் வகையில் வரும் மத்திய பட்ஜெட்டில் விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 5% முதல் 7% வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.