அக்டோபர் 1, 2025 முதல், அரசு அல்லாத NPS சந்தாதாரர்கள் 100% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய புதிய Multiple Scheme Framework (MSF) அனுமதிக்கிறது.

அரசு அல்லாத துறையில் உள்ள தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) சந்தாதாரர்களுக்கு அக்டோபர் 1, 2025 முதல் மிகப்பெரிய சலுகை கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே NPS திட்டத்தில் 100% பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இதுவரை அத்தகைய சலுகை கிடைக்கவில்லை. ஒரே CRA-வில் (CAMS, Protean, KFintech போன்ற மத்திய பதிவேடு குழுமங்களில்) ஒரு திட்டம்தான் இயக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால், புதிய Multiple Scheme Framework (MSF) விதியால் ஒரே PRAN எண்ணின் கீழ் பல திட்டங்களை வைத்திருக்கலாம். புதிய அறிவிப்பின் படி, ஓய்வூதிய நிதிகள் (PFs) பல்வேறு சந்தாதாரர்கள் தேவைக்கேற்ப தனிப்பட்ட திட்டங்களை அறிமுகப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. டிஜிட்டல் தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், நிறுவன ஊழியர்கள் போன்றோருக்கான திட்டங்கள் உருவாகும். ஒவ்வொரு திட்டத்திலும் குறைந்தபட்சம் 2 வகை இருக்கும்.

அவை மிதமான அபாயம் மற்றும் அதிக அபாயம் ஆகும். அதிக அபாய திட்டத்தில் 100% பங்குகளில் முதலீடு செய்யலாம். தேவையெனில் குறைந்த அபாய விருப்பமும் அறிமுகப்படுத்தலாம். வெளியேறும் விதிமுறைகளும், ஆண்டு ஊதிய (ஆன்னிட்டி) விதிகளும் முந்தையபடி தொடரும் என PFRDA தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், MSF திட்டத்திலிருந்து பொதுத் திட்டத்துக்கு மாற அனுமதி உண்டு.

ஆனால் பிரிவு 20(2) திட்டங்களுக்கு இடையே மாறுவது 15 ஆண்டு ‘வெஸ்டிங் பீரியட்’ முடிந்த பின்போ, அல்லது வழக்கமான வெளியேற்ற நேரத்தில்தான் சாத்தியம். அக்டோபர் 1 முதல் பல்வேறு மாற்றங்கள் உள்ளன. முதலீட்டாளர்கள் ஒரே PAN எண்கீழ் பல CRAs-ல் திட்டங்களை வைத்திருக்க முடியும். இதனால், பாதுகாப்பான மற்றும் தாக்கத்துடன் கூடிய முதலீடுகளை ஒரே கணக்கில் சமநிலைப்படுத்தலாம்.

இந்த மாற்றங்கள், நீண்டகால ஓய்வூதிய நிதிகளை பல்வேறு இலக்குகளுக்கேற்ப திட்டமிடுவதற்கு பெரும் உதவியாக இருக்கும். பங்குகளில் அதிக வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கும், பாதுகாப்பான முதலீடு விரும்பும் ஊழியர்களுக்கும் ஒரே தளத்தில் விருப்பங்கள் கிடைக்கின்றன.