ஆடி இந்தியா நிறுவனம் தனது Q7 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆடி நிறுவனம் Q7 ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகம் செய்தது. மேம்பட்ட Q7 மாடலின் அறிமுக விலை ரூ. 79.99 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 88.33 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் Q7 மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் 2020 வாக்கில் இந்தியாவில் புதிய பி.எஸ். 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது, இந்த மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட ஆடி Q7 மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்களும், உள்புறம் முழுமையாக மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடல் தற்போது பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
புதிய ஆடி காரின் டேஷ்போர்டில் 10.1 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.6 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆடியின் விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் புதிய Q7 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 3 லிட்டர் வி6 டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆடியின் குவாட்ரோ AWD சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஆடி நிறுவனத்தின் Q8 மற்றும் A8 மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. முந்தைய மாடலை போன்றே புதிய ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட் மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் GLE, பி.எம்.டபிள்யூ. X5 மற்றும் வால்வோ XC90 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இதில் வால்வோ XC90 மாடல் மட்டுமே 7-சீட்டர் வடிவில் கிடைக்கிறது. மற்ற இரு மாடல்களும் 5 சீட்டர் வேரியண்ட்களில் கிடைக்கின்றன.
