Adani-Hindenburg case: அதானி - ஹிண்டன்பர்க் வழக்கை விசாரிக்க வல்லுநர் குழு அமைப்பு: உச்ச நீதிமன்றம்
அதானி - ஹிண்டன்பர்க் வழக்கை 6 பேர் அடங்கிய வல்லுநர் குழு விசாரித்து 2 மாத காலத்தில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதானி குழுமம் குறுக்கு வழிகளில் அதிக அளவு கடன் பெற்றது உள்ளிட்ட பல முறைகேடுகளில் ஈடுப்பட்டது என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியது. இதுதொடர்பான அறிக்கை கடந்த ஜனவரியில் வெளியானதும் அதானி குழும நிறுவனங்கள் பங்குச்சந்தையில் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுமக்களின் பணமும் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்றும் அதானி குழுத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தேவையும் உள்ளது எனவும் கூறினர்.
அதானி - ஹிண்டென்பர்க் குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ. எம். சப்ரே தலைமையில் 6 பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் இருப்பார்கள்.
இந்த சிறப்பு நிபுணர் குழு 2 மாத காலத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தக் குழுவின் விசாரணைக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த அமைப்புகள், செபி ஆகியவற்றின் ஒத்துழைப்பும் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Assembly Election Results Live Updates 2023: நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா தேர்தல் முடிவுகள்!