ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயினுக்காக ஒருவரைக் கடத்திய போலீஸார் உள்ளிட்ட 8 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயினுக்காக ஒருவரைக் கடத்திய போலீஸார் உள்ளிட்ட 8 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர்.

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி, கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மீது 30 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் மீதான ஆர்வம் நாளுக்குநாள் அதிகரிப்பதும் இதுபோன்ற கிரிப்டோ க்ரைம் செயல்களைத் தூண்டிவிடுகிறது.

சர்வதேச சந்தையில் ஒரு பிட்காயின் மதிப்பு இந்திய ரூபாயின் படி ரூ.29 லட்சத்து 57ஆயிரத்து 67 என்பது குறிப்பிடத்தக்கது. பிட்காயின் மதிப்பு நாளுக்கு நாள் மாறிவருவதையடுத்து, ரூ.300 கோடி மதிப்புள்ள பிட்காயின்வைத்திருந்தவரை கடத்தியுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸார் தரப்பில் கூறுகையில் “ மும்பையைச் சேர்ந்த ஒருவரிடம்ரூ.300 கோடிக்கான பிட்காயின் இருப்பதை அறிந்த ஒரு கும்பல் அவரிடம் இருந்து அந்த பிட்காயின் எண்களை வாங்குவதற்காக அவரைக் செவ்வாய்கிழமை கடத்தியுள்ளனர். இந்த கும்பலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளும் அடங்கும். கடத்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் அளித்த புகாரையடுத்து, தனிப்படை அமைத்து விசாரணையும், தேடுதல் வேட்டையும் நடந்தது.

போலீஸாரின் தீவிரத் தேடுததலில் புனேயின் வடபகுதி அருகே பிம்ப்ரி சின்ஹாவத் பகுதியில் அந்தக் கும்பலை சுற்றி வளைத்தோம். கைது செய்யப்பட்ட கும்பலில் இருந்த போலீஸார் ஒருவர் மும்பை சைபர் கிரைம்பிரிவில் நன்கு பயிற்சி பெற்றவர். 

கடந்த மாதம் இதேபோன்று ஒருநபரை கடத்திய இந்தக் கும்பல், கடத்தப்பட்ட நபரை மீட்க வேண்டுமெனில் ரூ.8 லட்சத்தை பிட்காயின் வடிவில் கேட்டு மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. கடத்தப்பட்ட நபர் தற்போது விடுவிக்கப்பட்டாலும் அவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட காவலர் உள்பட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தனர்.

கிரிப்டோ கரன்சி மீதான மோகம் அதிகரிக்கும் அதேசூழலில் அதுதொடர்பான குற்றங்களும் அதிகரிக்கும். இதற்காகத்தான் கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்த மத்திய அரசு பட்ஜெட்டில் வரிவிதிப்புக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்தும் விதிகள் வரவில்லை. அவ்வாறு வரும்பட்சத்தில் இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

ஒருவரைக் கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுவர்களைக் கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்யமுடியும். ஆனால், கிரிப்டோ கரன்சி போன்ற மெய்நிகர் பணத்தை மிரட்டிப் பறிக்கும்போது, அதை மறுபடியும் போலீஸார் கைப்பற்றுவதும், மீட்பதும் கடினம். மேலும் கிரிப்டோ கரன்சியை பறிகொடுத்தவர் அல்லது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தாலும் அதற்கு சட்டரீதியாகச் நடவடிக்கை வருமா என்பதும் விவாதத்துக்குரியது