தமிழக பட்ஜெட்டில் எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி? கடந்த ஆண்டு பட்ஜெட்டுடன் ஓர் ஒப்பீடு
அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய முதல் பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகமாகியுள்ளது.
2024-25 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். காலை 10 மணிக்குத் தொடங்கிய உரை 2 மணிநேரம் 7 நிமிடங்கள் நீடித்தது.
இந்த தமிழக பட்ஜெட் உரையில் பல்வேறு முக்கியத் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி கடந்த ஆண்டு ரூ.19,465 கோடியாக இருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.20,043 கோடியாக அதிகரித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.22,562 கோடியில் இருந்து ரூ.27,922 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.18,661 கோடியில் இருந்து ரூ.20,198 கோடியாகக் கூடியிருக்கிறது.
நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.8,232 கோடியாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் ரூ.8,398 கோடியாக அதிகமாகி இருக்கிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 2023-24 பட்ஜெட்டில் ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 பட்ஜெட்டில் ரூ.3,706 கோடியாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
மானியச் செலவு 1.47 லட்சம் கோடி உயர்வு... காரணம் என்ன? தமிழக பட்ஜெட்டில் விளக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. சிங்காரச் சென்னை 2.0 திட்டத்துக்கு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்துக்கான நிதி ரூ.350 கோடியில் இருந்து ரூ.370 கோடியாக உயர்ந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.10,000 கோடியில் இருந்து ரூ.12,000 கோடியாக இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. சென்ற பட்ஜெட்டில் 'நான் முதல்வன்' திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.50 கோடி நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.200 கோடியாக அதிகமாகி இருக்கிறது. உயர்கல்வித் துறைக்கு 2023-24 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.6927 கோடி. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
வருவாய் பற்றாக்குறை கடந்த 2023-24 நிதி ஆண்டில் 37,540 கோடியாக இருந்தது. 2024-25 நிதி ஆண்டில் இது 44,907 கோடியாக உயர்ந்துள்ளது என்றும் மானியச் செலவு ரூ.1.47 லட்சம் கோடி அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Tamil Nadu Budget 2024 LIVE Updates | தமிழ்நாடு பட்ஜெட்: மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000!