2025–26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 1.544 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்து, 27% வளர்ச்சியுடன் புதிய சாதனை படைத்துள்ளது.

2025–26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஆட்டோமொபைல் துறையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த காலாண்டில் நிறுவனம் மொத்தமாக 1.544 மில்லியன் யூனிட்கள் விற்பனை செய்து, இதுவரை இல்லாத சாதனையைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வெளிநாட்டு சந்தைகள் என அனைத்து பிரிவுகளிலும் டிவிஎஸ்ஸின் வலுவான முன்னேற்றம் இதன் மூலம் வெளிவருகிறது.

இருசக்கர வாகன பிரிவில் டிவிஎஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 1.183 மில்லியன் யூனிட்களாக இருந்த விற்பனை, தற்போது 25% உயர்ந்து 1.484 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது. மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களுக்கு அதிகரித்த தேவை, இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால் உள்நாட்டு சந்தையில் டிவிஎஸ்ஸின் பிடிப்பு மேலும் வலுவடைந்துள்ளது.

மூன்று சக்கர வாகன பிரிவிலும் கனிசமான முன்னேற்றம் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் 0.29 லட்சம் யூனிட்களாக விற்பனையானது, இந்த ஆண்டு 0.60 லட்சம் யூனிட்களாக உயர்ந்து 106% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக வர்த்தக பயன்பாடு மற்றும் மைல் போக்குவரத்து தேவைகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தைகளிலும் டிவிஎஸ் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு விற்பனை 40% உயர்ந்து 4.10 லட்சம் யூனிட்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 2.94 லட்சமாக இருந்தது. இது உலகளாவிய சந்தைகளில் டிவிஎஸ் பிராண்டின் நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும், 2025 டிசம்பர் மாதம் டிவிஎஸ்ஸுக்கு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. அந்த மாதத்தில் மட்டும் 4.81 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது, கடந்த ஆண்டை விட 50% வளர்ச்சி காணப்பட்டது. மின்சார வாகனங்கள், இருசக்கர மற்றும் மூன்று சக்கர ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் வலுவான வளர்ச்சி தொடர்வதால், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் முழுமையான வளர்ச்சி பாதையில் இருப்பது தெளிவாகிறது.