ஒரு மணிநேரத்துக்கு ரூ.1000! தெறிக்கவிடும் பெங்களூரு ப்ரீமியம் பார்க்கிங் கட்டணம்!
வைரல் புகைப்படத்தில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒரு மணிநேரத்திற்கு ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை இஷான் வைஷ் என்பவர் தான் முதலில் வெளியிட்டுள்ளார்.
சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், பார்க்கிங் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் பெங்களூருவில் வாகனங்களை நிறுத்த பிரீமியம் பார்க்கிங் வசூலிக்கப்படுவது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.
வைரல் புகைப்படத்தில் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஒரு மணிநேரத்திற்கு ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட சரியான தேதி தெரியவில்லை என்றாலும், இது ட்விட்டரில்70,000க்கும் அதிகமான பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளது. பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
இந்த புகைப்படத்தை இஷான் வைஷ் என்பவர் தான் முதலில் வெளியிட்டுள்ளார். அவர் யுபி சிட்டி மாலில் கிளிக் செய்த படம் என்றும் கூறியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பயனர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பெங்களூருவில் விலைவாசி உயர்ந்து வருவதாக எடுத்துரைத்தனர்.
"இவ்வளவு கட்டணம் வசூலித்து, அந்தப் பணத்தில் காரை கழுவி பாலீஷ் செய்கிறார்களா என்ன?" என்று ஒரு பயனர் கேள்வி எழுப்பியுள்ளார். "இனிமேல் EMI மூலம் தான் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டுமா?" என மற்றொருவர் விரக்தியுடன் கூறியுள்ளார். "பிரீமியம் பார்க்கிங்? காரில் ப்ளூ டிக் வருகிறதா?" என இன்னொரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
சிலர் இதேபோன்ற அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டனர். கோவாவில் செல்ஃப் டிரைவ் காருக்கு இதே அளவு தொகையை செலுத்தியதாக ஒரு பயனர் கூறினார்.
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் வாடகை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. கூகுள், அமேசான், கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் மற்றும் அக்சென்ச்சர் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பெங்களூருவில் பணிபுரிகிறார்கள்.
கோவிட்-19 தொற்று பரவலின்போது பெங்களூரு மக்கள் குறைவான வாடகைக்காக நகரத்தை விட்டு வெளியேறினர். இப்போது கோவிட் பரவல் அபாயம் விலகிவிட்டதால், பெங்களூருவின் பொருளாதாரம் மற்றும் தனியார் துறை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. நில உரிமையாளர்கள் இழந்த வருவாயை திரும்பப் பெற வாடகையை உயர்த்துகின்றனர்.