ரூ.60,000க்கு 120 கிமீ ஓடும் ஸ்கூட்டர்.. Zelio X-Men+ வந்தாச்சு.. பெட்ரோல் விலை கவலையில்லை
ஜீலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய 2026 மாடல் X-Men+ மின்சார ஸ்கூட்டரை ரூ.60,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 120 கி.மீ வரை செல்லும் திறன் கொண்டது.

மலிவு விலை ஸ்கூட்டர்
ஜீலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய 2026 மாடல் X-Men+ குறைந்த வேக மின்சார ஸ்கூட்டர்-ஐ ரூ.60,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய வடிவமைப்புடன் வரும் இந்த ஸ்கூட்டரை வாங்கும் முதல் 5,000 பயனர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும். நகரப் பயணிகளை குறிவைத்து உருவாக்கப்பட்ட இந்த மாடல், மலிவு விலையில் அதிக வசதிகளை வழங்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய 2026 X-Men+ மாடல், நவீன ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு உடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜீலியோ ஸ்கூட்டர் அம்சங்கள்
டார்க் நைட் பிளாக், ஒயிட், மிட்நைட் ப்ளூ, நார்டோ கிரே போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது. தினசரி பயணத்தில் பயன்படுத்துவதற்கு இந்த ஸ்கூட்டர், ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 120 கி.மீ வரை பயணிக்க முடியும். இதன் அதிகபட்ச வேகம் 25 கி.மீ/மணி என்பதால், இது குறைந்த வேக வகைக்கு உட்பட்டதாகும். இம்மாடலில் முன்பு இருந்த 10-இன்ச் சக்கரத்தை மாற்றி, 12-இன்ச் பின் சக்கரம் வழங்கப்பட்டுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் உள்ள ஹைட்ராலிக் ஷாக் சஸ்பென்ஷன் உள்ளதால் சாலையின் அதிர்வுகளை குறைத்து மென்மையான பயணத்தை தருகிறது.
குறைந்த விலையில் அதிக ரேஞ்ச்
180 கிலோ வரை சுமை ஏற்றும் திறன் கொண்டது. மேலும், முன் டிஸ்க் பிரேக் மற்றும் பின் டிரம் பிரேக் இணைப்பு பாதுகாப்பான நிறுத்தத்தை உறுதி செய்கிறது. X-Men+ ஸ்கூட்டரில் 60/72V BLDC மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சுமார் 1.5 அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. லித்தியம் பேட்டரி மற்றும் லீட்-அமில பேட்டரி இரண்டும் ஆதரிக்கும் இந்த மாடலில், லித்தியம் பேட்டரிக்கு 4–5 மணி நேரமும், லீட் பேட்டரிக்கு 8–10 மணி நேரமும் சார்ஜ் நேரம் தேவைப்படும்.
ரிவர்ஸ் கியர் வசதி
மேலும், இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் கியர், டிஜிட்டல் டிஸ்ப்ளே, பார்க்கிங் சுவிட்ச், ஆண்டி-தெஃப்ட் அலாரம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சென்ட்ரல் லாக்கிங் போன்ற பல ஸ்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு வருட வாகன உத்தரவாதம் மற்றும் வருடாவருடம் பேட்டரி உத்தரவாதத்துடன் வரும் இந்த X-Men+ 2026 மாடல், நகரப் பயணத்திற்கு நம்பகமான மற்றும் சுலபமான தேர்வாக இருக்கும்.

