பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக மாருதி சுசூகி நிறுவனத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டினார்.

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தில் (பாரத் NCAP) சிறப்பாகச் செயல்பட்டதற்காக மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டினார். புதிய டிசையருக்கு 5 நட்சத்திர மதிப்பீடு கிடைத்ததை நிதின் கட்கரி வெகுவாகப் பாராட்டினார். 5 நட்சத்திர பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்ற இந்தியாவின் முதல் செடான் கார் ஆல்-நியூ டிசையர் ஆகும். பாரத் NCAP இன் கீழ் சோதிக்கப்பட்ட மற்றொரு மாடல் பலேனோ. இது 4 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்கள் சிறந்த பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெறுவதைப் பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது என்றும், பாரத் NCAP இல் அறிமுகமான மாருதி சுசூகியைப் பாராட்டுகிறேன் என்றும் நிதின் கட்கரி கூறினார். கடுமையான மற்றும் விரிவான சோதனை, மதிப்பீட்டுத் தரங்களை பாரத் NCAP கொண்டுள்ளது என்றும், நாட்டில் உள்ள வாடிக்கையாளர்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அனைத்து மாடல்களிலும் ஆறு ஏர்பேக்குகளை வழங்கிய மாருதி சுசூகியின் முயற்சியைப் பாராட்டுகிறேன் என்றும் கட்கரி கூறினார். ஒரு என்ட்ரி ஹேட்ச்பேக் முதல் பிரீமியம் SUV வரை ஆறு ஏர்பேக்குகள் வாகனப் பாதுகாப்பில் மாருதி சுசூகியின் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். மற்ற உற்பத்தியாளர்களை அவர்களின் மாடல்களின் அனைத்து வகைகளிலும் 6 ஏர்பேக்குகளை ஒரு நிலையான அம்சமாக மாற்ற இது ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் கட்கரி கூறினார். அனைத்து இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், சீட் பெல்ட்களை அணியவும், சாலைப் பாதுகாப்பை ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற்றவும் நிதின் கட்கரி வேண்டுகோள் விடுத்தார்.

சாலைப் பாதுகாப்பிற்கான மத்திய அரசின் முயற்சிகளைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பாரத் NCAP சான்றிதழைப் பெற்றுக்கொண்ட மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஹிசாஷி டகேச்சி கூறினார். கடுமையான வாகனப் பரிசோதனை நெறிமுறைகளைச் செயல்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிக்கு இந்திய அரசுக்கும் அனைத்து சோதனை நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.