ஜஸ்டு ரூ.3.3 கோடி தான்! மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ் 63 இ பெர்ஃபாமென்ஸ் கார் இந்தியாவில் அறிமுகம்!
மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிடி 63 எஸ் இ பெர்ஃபாமென்ஸ் (GT63 S E Performance) காருக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகும் இரண்டாவது ஹைப்ரிட் கார் Mercedes-Benz S 63 E Performance. இதன் விலை ரூ.3.3 கோடியில் இருந்து தொடங்குகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா நிறுவனம் இன்று இந்தியச் சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ் 63 இ பெர்ஃபாமென்ஸ் (Mercedes-Benz S 63 E Performance) காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் விலை ரூ.3.3 கோடியில் இருந்து தொடங்குகிறது. சொகுசு ஸ்போர்ட்ஸ் செடான் ரக காரான இது S-கிளாஸ் கார்களில் மிகவும் சக்தி வாய்ந்த காராக இருக்கும்.
ஜிடி 63 எஸ் இ பெர்ஃபாமென்ஸ் (GT63 S E Performance) காருக்குப் பிறகு இந்தியாவில் வெளியாகும் இரண்டாவது பிளக்-இன் ஹைப்ரிட் மெர்சிடிஸ் கார் இது. AMG-வடிவமைப்பு கொண்ட இந்த கார் பெரிய ஏர் இன்டேக்களுடன் ஸ்போர்ட்டி பம்பர்களைக் கொண்டது. முன்பக்கத்தில் பனமெரிகானா கிரில்லைப் பெற்றுள்ளது. பின்புறத்தில், குவாட் எக்ஸாஸ்ட் பைப், டிஃப்பியூசருடன் கூடிய பம்பர் உள்ளது
டார்க் குரோம் அல்லது கிளாஸ் பிளாக் அம்சங்களுக்கான நைட் எக்ஸ்டீரியர் பேக்கேஜையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். இத்துடன் கார்பன்-ஃபைபர் தொகுப்பும் கிடைக்கும். அதன் மூலம் முன்பக்க பம்பர், விங் மிரர்கள், சில்ஸ் மற்றும் பின்புற டிஃப்பியூசர் ஆகியவற்றில் கார்பன்-ஃபைபர் டிரிம்களை இணைக்க முடியும்.
ஒட்டுமொத்த வடிவமைப்பு S-கிளாஸ் கார்களைப் போலவே உள்ளது. ஆனாலும் உட்புறத்தில் ஸ்போர்ட்டியாக உள்ளது. நான்கு-ஸ்போக் ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல், ஏஎம்ஜி-ஸ்பெக் பெடல்கள் உள்ளன. இது 12.8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4 விதமான கிளைமேட் கன்ட்ரோல், பர்மெஸ்டர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் என பல வசதிகள் உள்ளன.
4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு V8 இன்ஜின் மூலம் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இ-மோட்டார் 190hp ஆற்றல் மற்றும் 320Nm உந்துவிசையை உற்பத்தி செய்கிறது. ஒருங்கிணைந்த சிஸ்டம் 802hp ஆற்றல் மற்றும் 1430Nm முறுக்குவிசை வரை செல்லும். மின்சார மோட்டார் 13.1kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதன் ரேஞ்ச் 33 கிமீ வரை இருக்கும்.
எஞ்சின் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 4-மேடிக் சிஸ்டம் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தி பகிரப்படுகிறது. 0-100 கிமீ வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டிவிடும். எட்டு விதமான டிரைவிங் வகைகள் உள்ளன. ஏர் சஸ்பென்ஷன், ஆக்டிவ் ரோல் பார்கள் மற்றும் கார்பன் செராமிக் பிரேக்குகள் ஆகிய ஆப்ஷனல் அம்சங்களையும் சேர்த்துகொள்ளலாம்.